Saturday 29 June 2013

History of Spectacles

நல்லா கண்ணைத் துடைச்சுக்கிட்டு பாருங்க... நான்தாங்க உங்க 'மூக்குக் கண்ணாடி’ பேசுறேன். விதவிதமான கண்ணாடிகளைப் போட்டு அசத்துறீங்க. சிலர் அடிக்கடி உடைச்சுடுறீங்க. மறந்து எங்கேயாவது வெச்சுடுறீங்க. நான் எப்படி எல்லாம் உருவாகி வருகிறேன் என்று தெரிந்தால், அப்படிப் பண்ண மாட்டீங்க தானே, வாங்க சொல்றேன்... கண்ணாடி மற்றும் ஃபிரேம் ஆகியவை பொதுவாக எனது பாகங்கள் என்றாலும், அந்த இரண்டு பிரதான பாகங்களுக்குள் சில பாகங்கள் உண்டு.

ஆரம்பக் காலத்தில் கண்ணாடி (குவி மற்றும் குழி) லென்ஸைக் கொண்டு என்னைச் செய்தார்கள். இப்போதும் பிரத்யேகமாய் ஆர்டர் கொடுத்தால், கண்ணாடியாலும் செய்வது உண்டு. என்றாலும், 80 சதவிகித மூக்குக் கண்ணாடிகளைப் பிளாஸ்டிக் லென்ஸ்களைக் கொண்டே செய்கிறார்கள். தொழிற்சாலையில் இருந்து நான் முழுவதுமாய் தயாராகி வெளியே வர 60 நாட்கள் ஆகின்றன. 'பாலிகார்பனேட்’ எனும் பிளாஸ்டிக்கில் இருந்து கண் துண்டு (Eye piece) எனப்படும் 'பிளாஸ்டிக்’ கண்ணாடிகளை முதலில் உருவாக்குகிறார்கள். அது, 75 இன்ச் தடிமன் கொண்டது.  

இதை, வட்ட வடிவ வில்லைகளாகத் தேய்க்கவும், பார்வை லென்ஸாக மாற்றவும் கர்வ்-ஜென்ரேட்டர் எனப்படும் கருவி பயன்படுகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி, 25 இன்ச் தடிமன் கொண்டவையாக மாற்றுகிறார்கள்.

அந்த வில்லையை எந்த வகைக் கண் கண்ணாடியாக உருவாக்க வேண்டும், அதில் எந்த மாதிரியான வேலைப்பாடு செய்ய வேண்டும்... என்று கணிப்பொறி மூலம் வடிவமைத்து, அடுத்தக் கட்ட வேலை தொடங்குவார்கள்.

இங்கே லென்ஸில், பார்வை மையம் (Optical centre) தேர்வு செய்யப்படும். இதற்கு, 'லென்ஸோ மீட்டர்’ எனும் கருவி பயன்படுகிறது. காரீய கலவைப் பூச்சு மூலம் எட்டப் பார்வை, கிட்டப் பார்வை லென்ஸ்களாக அவை மாற்றுவதற்கு, ஒவ்வொரு 'பிளாங்க்’ வில்லையாக எடுத்து, அதைக் கவனத்துடன் பிளாக்கர் கருவியில் பதப்படுத்துவார்கள்.

அலுமினியம் ஆக்சைடு, தண்ணீர் மற்றும் பாலிமரில் லென்சை, பல மணி நேரம் ஊற வைப்பார்கள். 'டிண்ட்’ எனப்படும் கரும்பூச்சை சேர்த்து, கண் கண்ணாடியில் கூலிங்கை ஏற்றுவார்கள். பிறகு, வலது கண் கண்ணாடி, இடது கண் கண்ணாடி பொறிக்கும் வேலை நடக்கும். பிறகு, கண்ணாடிக் கடைகளுக்கு வருவேன்.

எனக்குக் கவசமாக இருக்கும் ஃபிரேம்கள், ஸ்டெயின்லெஸ் கம்பிகள், அலுமினியம், பிளாஸ்டிக் என விதவிதமாகத் தயாராகின்றன. சமீப காலமாக அலுமினியம் ஆக்ஸைடு, பாலிமர் மற்றும் உதிர்ந்த பிளாஸ்டிக் துகள்களில் இருந்துகூட ஃபிரேம்கள் தயாராகின்றன.
நீங்கள், கண் டாக்டரிடம் போகிறீர்கள். அங்கே எழுத்துகள் தெரிகிறதா எனப் பரிசோதிக்க ஒரு சார்ட் இருக்கும். அதை படிக்கச் சொல்வார்கள். அதற்கு ஸ்நெல்ஸ் சார்ட் என்று பெயர். காரணம், அதைக் கண்டுபிடித்தவர், பெடர் ஸ்நெல்ஸ்.

உங்களின் பார்வைக் குறைபாடுக்கு ஏற்ப, பொருத்தமான வலது கண் லென்ஸ், இடது கண் லென்ஸ் வகைகளை டாக்டர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார்.. அதற்கு ஏற்ற வகையில் கண்ணாடிக் கடைக்காரர், நீங்கள் தேர்வு செய்த ஃபிரேமில் கண்ணாடியைப் பொருத்தி, சரியான கோணங்களில் லென்ஸோ மீட்டரில் வேறுபாடு செய்து, என்னை அழகாக உருவாக்கிக் கொடுப்பார்.

இப்படித்தான் நான் உன்னிடம் வந்து சேருகிறேன். கான்டாக்ட் லென்ஸ் என்று என் ஒன்றுவிட்ட சகோதரனும் இருக்கிறான். இவனை அணிய, ஃபிரேம் தேவை இல்லை. குட்டியாக பிளாஸ்டிக் ஷீட் போல இருப்பான். அதைக் கண்ணில் தினமும் பொருத்திக்கொள்ள வேண்டும்.

எந்த வகையாக இருந்தாலும் என்னைத் துடைத்து சுத்தமாகப் பராமரித்தால், நீண்ட காலம் உழைப்பேன். அத்துடன், கண்களுக்கு நன்மை பயக்கும் கீரை போன்ற உணவுகளைச் சாப்பிட்டால், என்னை அணிய வேண்டிய அவசியமே இருக்காது. செய்வீர்களா?


Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena