அகரம் நண்பர்கள் மேகமலை பயணத்திற்காக முடிவு செய்த போது 3 நாட்களும் வந்திருந்து விழாவை (ஹி.. ஹி..) பயணத்தை சிறப்பிக்கலாம் என்று நினைத்தேன். வழக்கம் போல அலுவலக பணிச்சுமை காரணமாக 2 நாட்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது.
வெள்ளிக் கிழமை இரவு KPN Travels பேருந்து மூலமாக சின்னமனூர் சென்று, அங்கிருந்து மேகமலை செல்வதாக திட்டம். (நண்பர்கள் அனைவரும் வெள்ளி காலையே மேகமலை சென்றிருந்தனர்). மேகமலையில் BSNL Tower மட்டுமே உண்டு என்பதால் தகவல் தொடர்பு மிகவும் கடினம்.
மேகமலை சென்ற நண்பர்கள், அங்கு நான் எங்கு வந்து சேர வேண்டும், சின்னமனூர் வந்து யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்ல நினைத்து தகவல் தொடர்பின்மை காரணமாக மிகவும் சிரமப்பட்டார்கள். வெள்ளி இரவு சின்னமனூர் பேருந்து ஏறும் வரை நான் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் முதல் 5 இலக்க கைப்பேசி எண் மட்டும் தான் என்னிடம் இருந்தது.
அதன் பிறகு, பல பிரயத்தனங்களுக்குப் பிறகு சின்னமனூரில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும், எந்த பேருந்தில் மேகமலை செல்ல வேண்டும், மேகமலையில் எந்த Cottage க்கு வர வேண்டும் என்று அறிந்து கொண்டேன்.
சரியாக சனிக் கிழமை காலை 07:45 மணிக்கு சின்னமனூர் வந்து சேர்ந்தேன். சின்னமனூர் பேருந்து நிலையத்தில் Refresh செய்து கொண்டு 10:00 மணிக்கு மேகமலை செல்லும் பேருந்திற்காக காத்திருந்தேன். (மேகமலை வழியாக இரவங்கலாறு) பேருந்து சரியாக 09:15 மணிக்கெல்லாம் வந்து விட்டது. மலைப் பாதையில் செல்லும் பேருந்து என்பதால் குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே. அது மட்டுமல்லாது பேருந்தில் ஏறுவதற்கு முன் ஒப்புகை சீட்டு வாங்க வேண்டும் என்றார்கள். நேரக் காப்பாளர் Rs. 3 பெறுமான சீட்டை Rs. 5 என்றார். வேறு வழியின்றி வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். சரியாக 10:15 க்கு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பொது அப்பாடா என்றிருந்தது. ஆனால், அங்கு தான் ஒரு Twist.
பேருந்து நேராக ஒரு தனியார் நான்கு சக்கர Workshop க்கு சென்று நின்றது. என்னவென்று விசாரித்தால் முன் பக்க Axle கழன்று விட்டதாகவும் அதனை சரி செய்து கொண்டுதான் புறப்பட முடியும் என்று கூறினார்கள். நல்ல வேளையாக அந்த தவறு கீழேயே கண்டு பிடித்தாகிவிட்டது. அரசு தொலை தூரப் பேருந்துகளை மட்டுமல்லாது மலைப் பாதை பேருந்துகளையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன். பேருந்து சரியாக 11:15 மணிக்கு புறப்பட்டது.
சின்னமனூர் - மேகமலை மலைப் பாதை 30 ஆண்டுகளுக்கு முன்பாக போடப் பட்டது என்று கூறினார்கள் நண்பர்கள். அதற்கேற்றார்போல் சாலை மிகவும் பயனற்றுப் போயிருந்தது. 18 கொண்டை ஊசி வளைவுகள். நல்ல கை தேர்ந்த ஓட்டுனர்களால் மட்டுமே வாகனங்களை செலுத்த முடியும். டயர்கள் நல்ல பிடிப்பு உள்ளதாக இருக்க வேண்டும். ஒரு வழியாக மதியம் 01:15 மணி அளவில் மலையில் 20 KM கடந்து நண்பர்கள் தங்கியிருந்த "மேகமலை Residency" அமைந்திருக்கின்ற "அந்துவன் Estate" வந்தாகிவிட்டது. நண்பர்கள் என் வருகைக்காக காத்திருந்தனர்.
முதல் நாள் (என்னுடைய...) பயணத் திட்டத்தில் "மகாராஜா மெட்டு" என்ற ஓர் இடத்திற்கு பயணப் பட்டோம். செல்லும் வழி எங்கும் பச்சை கம்பளங்களை விரித்தார்ப் போல் தேயிலைத் தோட்டங்கள். எங்களுடைய பயண முகவர் தேயிலை பயிரிடுதல் தொடங்கி தேனீர் பருகும் வரை ஒவ்வொரு நிலையையும் விளக்கினார். வழியில் மணலாறு, வன்னியாறு ஆகிய இடங்களில் இருந்த சிறு அணைக் கட்டுகளைப் பார்வையிட்டோம். மேகமலைப் பகுதி ஹைவேவிஸ் என்று அழைக்கப்படுகிறது.
மேகமலைப் பகுதியில் மொத்தமே 5 க்கும் குறைவான Cottage கள் உள்ளன. அவற்றில் அரசின் பயணியர் மாளிகையும், தாங்கும் விடுதியும் அடக்கம். அது மட்டுமல்லாது மிகவும் குறைவான அளவிலேயே Tea Shop களும் உணவு விடுதிகளும் உள்ளன.
மகாராஜா மெட்டு பகுதியை அடைந்தவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு மலையேறத் தொடங்கினோம். சுமார் 1.5 KM மலையேறிய பிறகு மகாராஜா மெட்டு வந்தடைந்தோம். அங்கிருந்து பார்த்தால் தேனி நகரம், போடி நகரம் தெரிகின்றது மற்றொரு புறம் கேரளாவின் தேக்கடி யைக் காண்பிக்கிறார்கள். அவ்வளவு வுயரத்தில் ஒரு சிதிலமடைந்த கோவில் ஒன்றும், சிறு கோவில் ஒன்றும் அரசின் நீரேற்று நிலையம் ஒன்றும் உள்ளது. உண்மையிலேயே அவ்வளவு ரம்மியமான இடம். நல்ல சீதோஷ்ண நிலை. 360 Degree View ல் தாராளமாக படம் எடுக்கலாம்.
சற்று இளைப்பாறிவிட்டு, அங்கிருந்து கீழிறங்கி எங்களுடைய மதிய (மாலை) உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பச்சை தேயிலைத் தொட்டங்களினூடே பயணப் பட்டு, தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலை களையும் பார்த்து விட்டு எங்கள் தங்குமிடத்துக்கு வந்தோம்.
அன்றிரவு உணவை முடித்துக் கொண்டு, நண்பர்களின் உதவியுடன் ஒரு புதிய வகையான Card Game "UNO" கற்றுக் கொண்டு விளையாடி விட்டு, Night Trekking எனப்படும் இரவு நேர காட்டுப் பயணத்தை மேற்கொண்டு விட்டு உறங்கலானோம்.
மறுநாள் காலை மிகவும் முன்னதாகவே எழுந்து தயாராகி மீண்டும் ஒரு "Road Walk" சென்றோம். அந்த காலை வேலையில் மேகமலை என்ற பெயருக்கேற்ப மேகங்கள் மலைகளைத் தொட்டுக் கொண்டு செல்கின்ற காட்சி வார்த்தைகளினால் விவரிக்க முடியாத அனுபவமாக இருந்தது.
மேகமலைக்கு விடை கொடுத்துவிட்டு மலையிலிருந்து கீழிறங்கி சின்னமனூர் வந்தோம். அதுவரை மிகவும் பொறுமையாக வாகனத்தை ஓட்டி வந்த எங்கள் ஓட்டுனர் சீரான சாலையைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியோடு வாகனத்தை தேக்கடி நோக்கி செலுத்தினார்.
வழியில் குமிளியில் காவல் சோதனைகளை முடித்துக் கொண்டு "பெரியார் புலிகள் சரணாலயம்" வந்து செர்ந்தோம். முல்லைப் பெரியார் அணை இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது. Boating செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கலானோம். பெரியார் ஆறு கிட்டத்தட்ட 145 அடி ஆழம் கொண்டது. இந்த ஆற்றில் தான் படகு சவாரி செய்யப்போகின்றோம். நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டு 01:45 மணிக்கு புறப்படும் படகில் சவாரி செய்யக் காத்திருந்தோம்.
காத்திருந்த நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அங்கு நடந்த ஒரு சோக நிகழ்வான படகு கவிழ்ந்து 40 பேர் பலியான சம்பவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 2 வகையான படகுகள் சவாரிக்காக பயன் படுத்தப் படுகின்றன. அளவில் சிறியது மற்றும் பெரியது. இரண்டு இரண்டு அடுக்குகளை உடையது. படகில் எங்களுக்கான இருக்கைகள் முதல் அடுக்கில் இருந்தது. பாதுகாப்புக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1:30 மணி நேரப் படகு சவாரி இது.
படகு சவாரி தொடங்கும் நேரத்தில் லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. ரம்மியமான ஒரு சூழல் அது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். நடு நடுவே உயர்ந்த மரங்கள். தூரத்தில் காட்டு விலங்கினங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. பெரியார் ஆற்றின் நடுவே ஒரு Guest House ம் உண்டு. எங்கு நோக்கினும் தண்ணீர் மற்றும் மலைகள். 01:30 மணி நேர பயணத்திற்கு பிறகு படகு சவாரி நிறைவுற்றது.
தேக்கடியில் இருந்து குமிளி வந்து வீட்டுக்குத் தேவையான திராட்சை, மிளகு மற்றும் இதர வகைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் தேனி நோக்கி புறப் பட்டோம். தேனியில் மாலை உணவு அருந்திவிட்டு 2 நாட்களின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டே சென்னை நோக்கிப் பயணமானோம்.
மேகமலையின் தற்போதய விவரம் அரிய https://rayilpayanam.blogspot.in/2017/04/1.html
ReplyDeleteMeghamalai govt resot contact no
ReplyDelete