Wednesday 4 December 2013

கோவை - ஈஷா - மருதமலை - உதகை பயணம் - 1

அமெரிக்க திரும்பல் (US  Return) நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை நோக்கி காலை 7 மணிக்கு துரந்தோ ரயிலில் 5 நண்பர்கள் புறப்படலானோம். இந்த ரயில் மதியம் 2 மணிக்கு கோவையை சென்றடைகிறது.  

துரந்தோ ரயிலில் பயணிப்பது இதுவே முதல் முறை. இது ஒரு இடை நில்லா ரயில். முழுவதும் குளிரூட்டப்பட்ட, உட்கார்ந்து மட்டுமே செல்லக் கூடிய ரயில். விமானப் பயணம் போலவே, ரயிலில் ஏறியதிலிருந்து உபசரிப்புகள் தான். அனைவருக்கும் அவரவர் விருப்ப செய்தித் தாள், காபி (அ) டீ. காலை நேர ரயில் என்பதால் காலை சிற்றுண்டி, மதிய உணவு அனைத்தும் ரயிலினுள்ளேயே. ரயில் ஒன்றும் அத்தனை வேகமில்லை. இடையில் தொழில்நுட்ப காரணங்களுகாக ஈரோடு சந்திப்பில் நிறுத்தப் படுகிறது. சரியான நேரத்தில் கோவை வந்தடைந்தோம்.

பயணத்தின் போதே, கோவையில் பார்க்க வேண்டிய இடங்களை பட்டியலிட்டு அதற்கான வண்டியையும் ஏற்பாடு செய்தாயிற்று. ஈஷா யோகா மையம் மற்றும் மருதமலை முருகனை தரிசித்துவிட்டு திருமண நிகழ்வுக்கு செல்வதாக திட்டம். 

கோவை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் நமக்கான வண்டியில் அமர்ந்து ஈஷா நோக்கி  பயணமானோம்.கோவை மாநகர எல்லை முடிந்து பேரூர் கோவிலை வெளியிலிருந்தே தரிசித்து விட்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரம் நோக்கி செல்லும் சாலையின் இரு புறமும் பச்சை பசேலன தோட்டங்கள் மற்றும் அதன் நடுவினிலே வீடுகள் அன்று பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

ஈஷா தியான மையம்:

ஈஷா தியான மையம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தியான மையம் மட்டுமல்லாது தீர்த்தக்குண்டம், லிங்க பைரவி ஆலயத்தையும்   உள்ளே கொண்டுள்ள பிரம்மாண்டமான கட்டுமான அமைப்பு.

தீர்த்தக்குண்டம் என்னும் அமைப்பு  கற்களால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொட்டி (கற்களால் ஆன குளம்) போன்றுள்ளது. இந்த குளத்தின் நடுவினில் நீர்வீழ்ச்சி கொட்டிக்கொண்டிருகின்றது. மூன்று பாதரச லிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியினில் நீரில் மூழ்கியபடி நிறுவப்பட்டுள்ளது. இந்த பாதரச லிங்கங்களை குளத்தில் இறங்கி கையால் தொட்டு வணங்க முடியும். இந்த குளத்தில் இறங்கி தரிசிக்க வேண்டுமெனில் அதற்கென்று அமைக்கப்பட்ட இடத்தினில் குளித்துவிட்டு வெறும் காவி துண்டுடன் தான் தரிசிக்க முடியும்.

இந்த தீர்தக்குண்ட அமைப்பின் தரிசனம் உடலையும் மனதையும் சுத்தப்படுத்தியது மட்டுமல்லாது ஒரு ஆன்மீக அனுபவத்தை அளித்தது. தியான லிங்க மண்டபத்தினுள் ஒரு நபர் நுழையத் தேவையான ஆன்மீக மனதை இந்த தரிசனம் கொடுக்கின்றது. இந்த தீர்த்தக்குண்டமானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளது.

தீர்த்தக்குண்டத்தில் தரிசனம் முடிந்தபின் தியான மையத்தினுள் செல்லும் முன்பாக லிங்க பைரவி ஆலய தரிசனம்.  லிங்க பைரவி ஆலயத்தின் முன்னே முப்பெரும் தேவர்களின் கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன தத்ரூபமாக.

இவையனைத்தையும் தரிசித்துவிட்டு ஈஷா தியான லிங்க மண்டபத்தினிற்குள் அனுமதிக்கப்படுகின்றோம். அரை வட்ட வடிவில் ஒரு DOM  அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட தியான லிங்கத்தை சுற்றி பலரும் தியானம் செய்தபடி அமர்ந்திருக்கின்றனர். எந்தவிதமான சப்தம் எழுப்பும் பொருட்களுக்கும் தியான லிங்க மையத்திற்குள் அனுமதி இல்லை. பேன்ட் அணிந்து சென்றால் கூட இரண்டு அங்குலத்திற்கு மடித்து வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

15 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிய ஒலி  எழுப்பப்படுகின்றது. அதனை வைத்து தியானத்தில் இருந்து வெளிவரலாம். மொத்தத்தில் ஈஷா  தியான மைய தரிசனம் ஒரு Rejuvenating experience.

மருதமலை:

அறுபடை வீடுகள் கொண்ட குமரனின் 'ஏழாவது படைவீடு' எனச் சிறப்பாகப் போற்றப்படும் ஆலயம்தான் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகும். இக்கோயில் கொங்கு நாட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் தரை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 அடி உயரத்திலும், கோவை மாநகரில் இருந்து வடமேற்குத் திசையில் சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலும் அமையப் பெற்றுள்ளது. கோவை மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை அடிவாரத்துக்கு 70 ஆம் எண் பேருந்து வசதி உண்டு.


மூன்று பக்கமும் மலை அரண் சூழப்பெற்ற மருதமலை எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இக்கோயில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் 'மருதமலை' என அழைக்கப்படுகிறது. மருதமலையில் சுப்ரமணிய சுவாமி வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக காட்சி அளிக்கின்றார்.கடந்த மார்ச் மாதத்தில் தான் குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளது. கோவில் மிக அழகாக  பராமரிப்பு செய்யப்படுகின்றது.

திருக்கோவிலின் ராஜ கோபுரத்தின் வழியாக உள்ள படிக்கட்டிலும், திருக்கோவிலின் தெற்கு புறத்தில் உள்ள படிக்கட்டுகள் மூலமாகவும் மூலஸ்தானத்தை அடையலாம். முருகனை தரிசித்துவிட்டு தெற்குப் புற வழியாக கீழ் இறங்கினால் சப்தகன்னியர் சந்நிதி உள்ளது. அங்கிருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் "பாம்பாட்டி சித்தர் சந்நிதி" அமைந்துள்ளது.


மலைக் கோவிலை படிக்கட்டுகள் வழியாகவும், வாகன வசதிகளினூடாகவும் அடையலாம். திருத்தணி கோவில் போலவே, இங்கும் தேவஸ்தான அமைப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியின் இரு மருங்கிலும் பூஜை சாமான்கள் விற்கும் கடைகள் ஏராளம். இங்கு ஒரு கடையில் (கடை முழுவதும்) இலந்தை பழத்தால் ஆன தின்பண்ட வகையறாக்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மலையில் கிடைக்கும் இலந்தைப் பழங்களைக் கொண்டு இப்பொருட்கள் செய்யப்படுவதாகக் கூறினார்கள். பல நாட்களுக்குப் பிறகு இலந்தைப் பழ தின்பண்டங்கள் சுவைத்தோம். மருதமலை முருகன் தரிசனத்தை திவ்யமாக முடித்துவிட்டு மீண்டும் கோவை நோக்கிப் பயணமானோம்.

நண்பரின் திருமண வரவேற்பு, கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜென்னி'ஸ் கிளப் - ல். செல்லும் வழியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் Brookfields Mall, Fun Mall ஆகியவைகளையும் பார்த்தோம்.

நண்பரின் திருமண வரவேற்பு முடிந்து  மீண்டும் கோவை காந்திபுரம் ஹோட்டல் அறைக்கு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் பயணத்திற்கு தயாரானோம்.  

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena