Saturday, 28 December 2013

திருமலை தரிசனம்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏழுமலையானை திருமலைக்கே சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது !!! (பலமுறை சென்னை வேங்கட நாராயணா ரோட்டில் தரிசித்தமையால்...)

இரண்டாவது முறையாக தி.நகர்  பர்கிட் ரோட்டில் அமைந்துள்ள ஆந்திர மாநில சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து காலை 5 மணிக்கு சரியான நேரத்தில் புறப்பட்டாயிற்று.  திருத்தணி, புத்தூர் வழியாக திருப்பதி. வழியில் புத்தூரில் ஆந்திர மாநில சுற்றுலா உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு திருப்பதி நோக்கி பயணமானோம். 

திருப்பதி RTC பேருந்து நிலையத்தில் திருமலைக்கு செல்லும் அரசுப் பேருந்திற்கு மாற்றலாகி திருமலைக்கு புறப்பட்டோம். ஒவ்வொரு முறை திருமலைக்கு பயணப்படும் போதும் கண்டிப்பாக ஏதாவது ஒரு மாற்றத்தை காண முடியும். இம்முறை திருமலைக்கு சென்ற அரசுப் பேருந்தில்  "ஓம் நமோ வேங்கடேசாய.." மந்திரம் ஒலித்துக்குக் கொண்டே இருந்தது. இந்த மந்திர உச்சரிப்பு நம்மை திருமலைக்கு செல்லும் வழியெங்கும் மனதை  ஆன்மீகத்தில் ஒருங்கிணைப்படுத்தியது. மேலும், மலைச் சாலை தொடங்கியதுமே ஒவ்வொருவரும் சோதனைக்குட்படுத்தியபிறகே பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

திருமலை ராம் பக்கீஜா பேருந்து  நிலையத்தில் இறக்கி விடப்பட்டோம். தலை மொட்டை அடித்துக் கொள்ள சென்றவர்கள் திரும்பும் வரை அங்கேயே காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு கை பேசி, செருப்புகள் மற்றும் நம்மிடம் உள்ள அனைத்து வகையான மின்னணு சாதனங்களை அங்கு ஒரு கடையில் டோக்கன் போட்டு வைத்து விட்டோம். இனி தரிசனம் முடிந்த பிறகுதான் இதனை திரும்ப எடுக்க முடியும்.

திருமலையில் எதாவது ஒரு கட்டிட, சாலை மற்றும் மராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. கோவிலின் முன்புறம் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கு முன்  திருமலை வந்த பொது கோவிலின் முன்னே சூடம் ஏற்றும் இடத்தில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை இருபுறமும் கடைகள் இருக்கும். இம்முறை ஆஞ்சநேயர் கோவில் வரை தரை தான். மிகவும் விஸ்தாரமாக காட்சி அளிக்கின்றது.

கோவிலுக்கு இடது புறம் உள்ள வைகுண்டம் Q காம்ப்ளெக்ஸ் க்கு சென்று சுற்றுலா அதிகாரி Rs. 300/- அனுமதி சீட்டு வாங்கி வரும் வரை காத்திருந்தோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சரியாக மணி 12 அளவில் Q காம்ப்ளெக்ஸ் ன் உள்ளே அனுமதிக்கப் பட்டோம். வழக்கம் போல அறைகளில் மக்கள் கூட்டம். நாங்கள் 25 ஆம் எண் அறையிலிருந்து வெளியேறி Q காம்ப்ளெக்ஸ் முழுவதும் நடந்து (ஊர்ந்து!) சென்று மீண்டும் கோவிலின் இடது புற வழியாக திரும்பி முன்புறமான மஹா  துவாரம் என்றழைக்கப்படும் பிரதான வாயிலில் நுழைந்தோம்.

கோவிலினுள் அனைத்து மண்டபங்களும் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன. கொடிமரம் தாண்டி மீண்டும் ஒரு சிறு கோபுரம் வழியாக மூலஸ்தானம் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தோம். அதுவரை பொறுமையாக வந்த மக்கள் அதற்குப் பிறகு தள்ளு முள்ளுதான். கிட்ட தட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு ஏழுமலையானை சுமார் 1 நிமிடம் தரிசித்துவிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு கோவிலின் உள்ளே இருந்து வெளியேறினோம்.

சுற்றுலா அதிகாரி கூறியது போல கோவிலின் எதிரே உள்ள புத்தக நிலையத்தில் அனைவரின் வருகைக்காக காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு அவரவர் லட்டு பிரசாதங்களை பெற்றுக் கொண்டு மீண்டும் ராம் பக்கீஜா பேருந்து நிலையத்திற்கு திரும்பி உடமைகளை பெற்றுக் கொண்டு திருப்பதி நோக்கி பயணமானோம்.

திருப்பதி வந்தவுடன் மதிய உணவு எடுத்துக் கொள்ள திட்டம். மணி 4.45. எங்களுடைய அடுத்தப் பயணத்திட்டத்தில் திருச்சானூர் அலமேலுமங்கை கோவில். இந்த கோவிலில் மாலை 5.30 மணியிலிருந்து 07.00 மணி வரை தரிசனம் நிறுத்தப்படுகிறது. இந்த காரணத்தை கொண்டு மதிய உணவை புறந்தள்ளி விட்டு Rs. 100/- பெறுமான அனுமதி சீட்டு வாங்கி 05.30 மணிக்கு முன்னதாகவே தரிசனம் முடித்தாயிற்று. திருச்சானூர் கோவிலில் Rs. 100/- அனுமதி சீட்டிற்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சென்னை திரும்பும் வழியில் திருத்தணியில் எங்களுடைய மதிய(மாலை) உணவை அருந்தினோம். ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்  மற்றும் ஹிந்தி  (தெரிந்த வரை!) மொழிகளில் பலரிடம் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. 

திருமலை-திருப்பதி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் திருத்தணி, திருவள்ளூர், போரூர் வழியாக சென்னை வந்தடைந்தோம்.


0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena