Wednesday 12 November 2014

சிஸ்துபலேக்கா

பயணங்கள் என்றுமே சலிப்பு தட்டாதவை. புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய விஷயங்கள் என எல்லாமே புதியதாக அமைவதனால் என்னவோ!! அவ்வாறான இனிமையான பயணங்களில் மழலைகளுடன் உரையாடுவது அலாதியான ஒன்று. 

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கூட்டமாக இருந்ததனால் ஒரு 5 வயது சிறுமியை இருக்கையில்  அமர்ந்திருந்த என்னுடைய பொறுப்பில் விட்டுவிட்டு   பெற்றோர்கள் நெரிசலில் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறுமியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். முதல் கேள்வியாக எப்போதும் போல் "உன்னுடைய பேர் என்ன?" என தொடங்கினேன். சற்றே தயக்கத்திற்குப் பிறகு "சிஸ்துபலேக்கா" என்று பதில் வந்தது. ஒன்றும் விளங்கவில்லை அந்த பதிலில். மீண்டும் அதே கேள்வியை கேட்க, பதிலிலும் எந்த மாறுதலும் இல்லை. நமக்கு மறுபடியும் புரியாமலே இருந்தது. 

புரிந்துகொண்டதுபோல் சமாளித்துக் கொண்டு  "எந்த வகுப்பில் படிக்கிறாய்?" என அடுத்த கேள்வியை கேட்க, முதலாம் வகுப்பு என்று முதல்முறையாக சரியான பதில் சொன்னாள். இருந்தாலும் மனதினில் அந்த பெயர் புரியாத நிலை வேறு குத்திக் கொண்டிருந்தது. மனதிற்குள் பலவேறு வகையான கேள்விகள் அந்த பெயரை கண்டு பிடிப்பதற்கு...

சிறுமியின் நெற்றியை பார்த்தேன், Christian ஆக இருப்பர்களோ என்று. ம்ஹூம், இல்லை. நெற்றியில் பட்டையாக விபூதி. கோவிலில் இருந்து நேரடியாக வந்ததுபோல். முகம்மது கஜினியைப் போல் மீண்டும் முயற்சிக்க இம்முறையும் அதே "சிஸ்துபலேக்கா" என்ற பதில் தான். மனதுக்குள் ஒரு பெயரைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்ற இயலாமை வேறு. இருந்தாலும் மழலை மொழி அவ்வளவு எளிதல்ல புரிந்துகொள்ள. எப்படியிருந்தாலும் சிறுமியை அவளது பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் போது பெயர் பெயர் கேட்டுவிட வேண்டும் என்றும் மனம் எண்ணியது. 

மீண்டும் அதே கேள்வி மற்றும் அதே பதில். இம்முறை 2ஆவது கேள்வி வித்தியாசமாக "உங்க வீட்டில் உன்னை எப்படி கூப்பிடுவாங்க?" என்று. "துபலேக்கா" என்று பதில் வந்தது . சுதாரித்துக் கொண்டு "சுபலேகா" வா என்றேன். ஆமாம் என்று பெரியதாய் தலையாட்டினாள் அவள். அப்பாடா... பேரு மூச்சு, அவளது பெயர் "ஸ்ரீ சுபலேகா". அறிவியல் விஞ்ஞானிகள் யுரேக்கா என்று கர்ஜிப்பது போல் தோன்றியது மனம். 

இந்த பெயர் கண்டு பிடிப்புக்கு இடையே பல விஷயங்கள் மனதுக்குள் ஓடின.

  • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் Daddy, Mummy என்று அழைப்பதையே விரும்புகிறார்கள்.
  • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ABCD ஒழுங்காக சொல்கிறார்களா என்றே எண்ணுகின்றனர்.
  • தமிழ் படிப்பது/ பேசுவது தவறு என்றே எண்ணுகின்றனர்.


அவர்கள் தத்தம் பெயர்களை ஒழுங்காக உச்சரிக்க வேண்டும். பிறர் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் அதற்கான பயிற்சியில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும்.

சமீபத்தில் ஒரு சமூக வலைத்தளத்தில் படித்த செய்தியை மேற்கூறிய சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க தோன்றியது.

பெங்களூரில் ஒரு பள்ளிச் சிறுமியை ஒருவன் கடத்த முயல்கிறான், அந்த சிறுமியிடம் அவரது தாயார் வீட்டுக்கு அழைத்து வர சொன்னதாக சொல்ல, அவனிடம் Password என்ன என்று கேட்டிருக்கிறாள் அவள். திருடன் முழிக்க ஆரம்பித்திருக்கிறான். புத்திசாலியான சிறுமி மற்றும் அவளது தாயார்  அந்த நேரத்தில் சமயோசிதமாக எவ்வாறு நடந்துகொள்வது என்று பயிற்சி கொடுத்திருக்கிறார். பாராட்டப்படவேண்டிய ஒன்று.

தமிழ் படிப்போம்/ பேசுவோம்/ கற்றுக்கொடுப்போம்/ உச்சரிப்போம் தெளிவாக.
Read More

Tuesday 11 November 2014

இடைவெளி....... திருமணம்...... தொடக்கம்

இடைவெளி
.
.
.
.
.
ஜனவரி மாதத்திற்கு பிறகு பணிச்சுமை மற்றும் பலவேறு காரணங்களினால் தள்ளிப் போன வலை பதிவினை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி.
.
.
.
.
.
திருமணம் 
.
.
.
.
.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் ஆசியுடன்
2014 செப்டம்பர் மாதம் திருமணம் இனிதே நடைபெற்றது.
.
.
.
.
.
தொடக்கம்
.
.
.
மீண்டும் இந்த வலைப் பூவின் மூலம் கருத்துக்களை பகிர விழைகிறேன்.
Read More

Tuesday 28 January 2014

புத்தக காட்சி - 2014

சென்னை புத்தக காட்சி - 2014, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திருவிழா.
சென்ற ஆண்டு முழுவதும், என்னுடைய வாசிப்பிற்கான ரசனைக்கு ஒத்துப் போகும் புத்தக மதிப்புரைகளைப் பட்டியலிட்டு வந்துள்ளேன்.

அந்த பட்டியலுக்கு செயல் வடிவம் கொடுக்க YMCA மைதானத்தில் நடந்த சென்னை புத்தக காட்சி - 2014 க்கு சென்று வந்தேன்.

இம்முறை வாகன நிறுத்தும் இடத்திலிருந்து புத்தக காட்சி நடக்கும் YMCA கல்லூரி மெயின் கேட் வரை வேன் - ல் அழைத்துச் சென்றார்கள். 770 ஸ்டால்கள் கொண்ட பிரம்மாண்டமான இடம். வழக்கம் போல தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயரில் நடை பாதைகள். குறுகலாக இல்லாமல் விஸ்தாரமாக தெரிந்தது.

வழக்கம் போல இம்முறையும் குழந்தைகளுக்கான CD, DVD ஸ்டால்கள், ஜூஸ் கடைகள் மற்றும் வித்தியாசமாக நித்தியானந்தர் மற்றும் சில சாமியார்களின் அரங்ககுகளும் இடம் பெற்றிருந்தன.

மனுஷ்ய புத்திரன், ஞாநி, சாரு நிவேதிதா, அராத்து மற்றும் சில சின்ன/பெரிய திரை நடிகர்களையும் மற்றும் பல வலைப் பூ எழுத்தாளர்களையும் சந்திக்க முடிந்தது.

வாங்கிய புத்தகங்கள்:

பெயர் - ஆசிரியர் - பதிப்பகம்; என்ற வரிசையில்.

1. சின்ன வயதினிலே - மெரினா - விகடன்
2. ஆறாவடு - சயந்தன் - தமிழினி
3. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - மீனாக்ஷி
4. பெர்லின் இரவுகள் - கோ. கருணாமூர்த்தி - உயிர்மை
5. அன்சைஸ் - பா. ராகவன் - மதி நிலையம்
6. ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ண நிலவன் - நர்மதா
7. அடுத்த கட்டம் - என். சொக்கன் - மதி நிலையம்
8. பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன் - காலச்சுவடு
9. ஆதி மங்கலத்து விசேஷங்கள் - சு. கி. சிவகுமார் - விகடன்
10. எரியும் பனிக் காடு - இரா. முருகவேல் - விடியல்
11. ஒரு இந்திய கிராமத்தின் கதை - சரவணன் - சந்தியா
12. அடுத்த வீடு 50 மைல் - தி. ஜானகிராமன் - ஐந்திணை
13. எஸ்கேப் - சுரேகா - மதி நிலையம்
14. வட்டியும் முதலும் - ராஜு முருகன் - விகடன்
15. நம். 40 ரெட்டை தெரு - இரா. முருகன் - கிழக்கு
16. லிண்ட்சே லோகன் W/O  மாரியப்பன் - வா. மணிகண்டன் - யாவரும்.காம் 
17. ராஜீவ் காந்தி சாலை - விநாயக முருகன் - உயிர்மை
18. ஆஸ்டின் இல்லம் - சுஜாதா - கிழக்கு
19. ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - எஸ். ராமக்ருஷ்ணன்
20. மங்கள இசை மன்னர்கள் - மணியன் - மணிவாசகர்
Read More

Thursday 23 January 2014

தமிழ் இனி மெல்ல சாகும்? - யார் சொன்னது?!


அதிஷா அவர்களின் வலைப்பூவில், சீனப் பெண் ஒருவர் சன் தொலைக்காட்சியில், சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் தமிழில் சரளமாக உரையாடி இருக்கிறார் என்று கூறியிருந்தார். மேலும் அதற்கான காணொளி இணைப்பையும் அளித்திருந்தார்.

அந்த காணொளியை மிகவும் ஆர்வத்துடன் பார்க்க நேர்ந்தது. சீன வானொலி தமிழ் பிரிவு இயக்குனர், கலைமகள் என்பவரின் பேட்டி அது. கலைமகள் என்ற பெயர் அவரின் தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாக அவரின் ஆசிரியர் சூட்டியதாக கூறினார். அவரால் முடிந்த வரையில் ஆங்கில கலப்படமின்றி அவரால் தமிழில் உரையாட முடிந்தது. அவ்வளவு அட்சர சுத்தமாக தமிழில் உரையாடினார். 

சீன மொழி மட்டுமல்லாது, வேற்று நாட்டு மொழி ஒன்றை படிக்க ஆர்வப்பட்டு, இந்திய மொழிகளில் தமிழை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தமிழ் கலாசாரம், கோவில்கள்  மற்றும் பண்பாடு என்று குறிப்பிட்டார். மேலும் அவர், 2013 ஆண்டை  ஈராயிரத்து பதிமூன்று என்று உச்சரித்தது மிகவும் ஆச்சரியம். 

இந்தியாவில் முதலில் பார்த்த நகரம் சென்னை என்றும் தமிழ் உணவுகளில் இட்லி, மசாலா தோசை ஆகியவை பிடித்திருக்கிறதாகவும் கூறினார்.

மேலும், சீனாவில் இன்ப உலா என்ற சீன பயண அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும், சீன - தமிழ் அகராதி தயார் செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தமிழர்களாக இருந்தும், அவர்களால் சாதாரண தமிழில் கேள்விகளை கேட்க முடியவில்லை. சாதாரணமாக உரையாடினால் எங்கு ஆங்கிலம் கலந்து விடுமோ என்ற அச்சத்தால் செந்தமிழில் தான் பேசினர். மேலும், கலைமகள் திருக்குறள் (நன்றி மறப்பது நன்றன்று... என்ற), தமிழ் பாடல் பாடியதும் மிகுந்த ஆச்சர்யமே.

அந்த காணொளிக்கான சுட்டி: http://www.youtube.com/watch?v=DoZp0AZ94ME 



Read More

Thursday 2 January 2014

2014 - புத்தாண்டு கொண்டாட்டங்கள்


Happy New Year - 2014

புத்தாண்டு தொடக்கம் Shalom Mansion ல் நண்பர்களுடன் வழக்கம் போல் கொண்டாடி முடித்தாயிற்று. இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏனோ களை கட்டவில்லை என்றே தோன்றுகிறது.

01-01-2014: மிகச் சமீபத்தில் திருமலைக்கு சென்று பெருமாளை தரிசித்தபடியால் இம்முறை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  புத்தாண்டு தரிசனம். வடபழநி முருகனையும் தரிசித்துவிடவேண்டும் என்று மனது அடித்துக் கொண்டமையால் வடபழநி ஆண்டவரை சேவிக்க கோவில் வரை சென்றாகிவிட்டது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம். Rs. 100, Rs. 50 மற்றும் தர்ம தரிசனம் என வகைபடுத்தியும் மிக அதிகமான கூட்டம். Q வில் நின்றால் 3 மணி நேரமாவது ஆகும் எனப் பட்டதால், வடபழனி ஆண்டவரை கோபுர தரிசனம் செய்து விட்டு நடையை கட்டினேன்.

நேரே மாயாஜால் பயணம். (அது என்ன மாயமோ தெரியவில்லை, ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் மாயாஜாலில் மட்டுமே டிக்கெட் கிடைக்கின்றது!!!). கிழக்கு கடற்கரை சாலையில் போகிற வழி எங்கும் புகழ் பெற்ற கோவில்கள் (சாய் பாபா, ISKCON, பூரி ஜெகந்நாதர் etc.), உணவகங்கள் அதிகம் இருப்பதாலும் விடுமுறை தினத்தன்று இந்த சாலை அதிகபட்ச மக்களால் பயன் படுத்தப்படுவதால் எங்கு காணினும் போக்குவரத்து நெரிசல். 

நண்பர்களுடன் மாயாஜாலில் ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா மற்றும் பலர் நடித்த "என்றென்றும் புன்னகை" திரைப்படம் பார்த்தேன். (மேற்கூறிய காரணத்தால் அரை மணி நேரம்  தாமதமாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன்). ஒரு வித்தியாசமான கதைக்களம். திருமணமே செய்ய மறுக்கும் இளைஞர்கள், சூழ்நிலைகளினால் மாறி திருமணம் செய்து கொள்ளும் கதை.

திரைப்படம் முடிந்தபின், சோழிங்க நல்லூரில் இல்ல ISKCON கோவில் சென்று ராதா கிருஷ்ணரை வழிபட்டோம். கோவிலின் அமைப்பு  மிக நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.  ISKCON கோவில் கட்டுமானம் பிற ISKCON கோவிலைப் போலவே இருக்கின்றது. முன்பொருமுறை பெங்களூரு ISKCON கோவில் சென்று வந்திருக்கிறேன்.

மாலை மீண்டும், ECR ல் பயணித்து வேட்டுவான்கேணி பகுதியில் உள்ள "BASERA" என்ற சிறப்புக் கூறு உணவகத்தில் உணவருந்தினோம். BASERA உணவகம் ஒரு Garden Theme ல் உருவாக்கப்பட்டுள்ளது. இருட்டான அந்த Garden அமைப்பில், மேஜையில் மெழுகுவர்த்தி வெளிச்சம் தான். (ஆங்கிலத்தில், Candle Light Dinner என்கிறார்கள்).

மொத்தத்தில், வழக்கம் போல ஒரு புத்தாண்டு தினத்தை மகிழ்வுடன் கொண்டாடிய நிறைவுடன் கலைந்தோம்.
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena