Wednesday, 12 November 2014

சிஸ்துபலேக்கா

பயணங்கள் என்றுமே சலிப்பு தட்டாதவை. புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய விஷயங்கள் என எல்லாமே புதியதாக அமைவதனால் என்னவோ!! அவ்வாறான இனிமையான பயணங்களில் மழலைகளுடன் உரையாடுவது அலாதியான ஒன்று. 

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கூட்டமாக இருந்ததனால் ஒரு 5 வயது சிறுமியை இருக்கையில்  அமர்ந்திருந்த என்னுடைய பொறுப்பில் விட்டுவிட்டு   பெற்றோர்கள் நெரிசலில் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறுமியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். முதல் கேள்வியாக எப்போதும் போல் "உன்னுடைய பேர் என்ன?" என தொடங்கினேன். சற்றே தயக்கத்திற்குப் பிறகு "சிஸ்துபலேக்கா" என்று பதில் வந்தது. ஒன்றும் விளங்கவில்லை அந்த பதிலில். மீண்டும் அதே கேள்வியை கேட்க, பதிலிலும் எந்த மாறுதலும் இல்லை. நமக்கு மறுபடியும் புரியாமலே இருந்தது. 

புரிந்துகொண்டதுபோல் சமாளித்துக் கொண்டு  "எந்த வகுப்பில் படிக்கிறாய்?" என அடுத்த கேள்வியை கேட்க, முதலாம் வகுப்பு என்று முதல்முறையாக சரியான பதில் சொன்னாள். இருந்தாலும் மனதினில் அந்த பெயர் புரியாத நிலை வேறு குத்திக் கொண்டிருந்தது. மனதிற்குள் பலவேறு வகையான கேள்விகள் அந்த பெயரை கண்டு பிடிப்பதற்கு...

சிறுமியின் நெற்றியை பார்த்தேன், Christian ஆக இருப்பர்களோ என்று. ம்ஹூம், இல்லை. நெற்றியில் பட்டையாக விபூதி. கோவிலில் இருந்து நேரடியாக வந்ததுபோல். முகம்மது கஜினியைப் போல் மீண்டும் முயற்சிக்க இம்முறையும் அதே "சிஸ்துபலேக்கா" என்ற பதில் தான். மனதுக்குள் ஒரு பெயரைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்ற இயலாமை வேறு. இருந்தாலும் மழலை மொழி அவ்வளவு எளிதல்ல புரிந்துகொள்ள. எப்படியிருந்தாலும் சிறுமியை அவளது பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் போது பெயர் பெயர் கேட்டுவிட வேண்டும் என்றும் மனம் எண்ணியது. 

மீண்டும் அதே கேள்வி மற்றும் அதே பதில். இம்முறை 2ஆவது கேள்வி வித்தியாசமாக "உங்க வீட்டில் உன்னை எப்படி கூப்பிடுவாங்க?" என்று. "துபலேக்கா" என்று பதில் வந்தது . சுதாரித்துக் கொண்டு "சுபலேகா" வா என்றேன். ஆமாம் என்று பெரியதாய் தலையாட்டினாள் அவள். அப்பாடா... பேரு மூச்சு, அவளது பெயர் "ஸ்ரீ சுபலேகா". அறிவியல் விஞ்ஞானிகள் யுரேக்கா என்று கர்ஜிப்பது போல் தோன்றியது மனம். 

இந்த பெயர் கண்டு பிடிப்புக்கு இடையே பல விஷயங்கள் மனதுக்குள் ஓடின.

  • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் Daddy, Mummy என்று அழைப்பதையே விரும்புகிறார்கள்.
  • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ABCD ஒழுங்காக சொல்கிறார்களா என்றே எண்ணுகின்றனர்.
  • தமிழ் படிப்பது/ பேசுவது தவறு என்றே எண்ணுகின்றனர்.


அவர்கள் தத்தம் பெயர்களை ஒழுங்காக உச்சரிக்க வேண்டும். பிறர் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் அதற்கான பயிற்சியில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும்.

சமீபத்தில் ஒரு சமூக வலைத்தளத்தில் படித்த செய்தியை மேற்கூறிய சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க தோன்றியது.

பெங்களூரில் ஒரு பள்ளிச் சிறுமியை ஒருவன் கடத்த முயல்கிறான், அந்த சிறுமியிடம் அவரது தாயார் வீட்டுக்கு அழைத்து வர சொன்னதாக சொல்ல, அவனிடம் Password என்ன என்று கேட்டிருக்கிறாள் அவள். திருடன் முழிக்க ஆரம்பித்திருக்கிறான். புத்திசாலியான சிறுமி மற்றும் அவளது தாயார்  அந்த நேரத்தில் சமயோசிதமாக எவ்வாறு நடந்துகொள்வது என்று பயிற்சி கொடுத்திருக்கிறார். பாராட்டப்படவேண்டிய ஒன்று.

தமிழ் படிப்போம்/ பேசுவோம்/ கற்றுக்கொடுப்போம்/ உச்சரிப்போம் தெளிவாக.

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena