Sunday, 2 August 2015

குற்றாலம் - கன்னியாகுமரி - I

இரண்டு நாட்கள் அலுவலகத்தில் இருந்து குற்றாலம் - கன்னியாகுமரி சுற்றுலா. Official (அ) Un-Official என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். என்னுடைய பணிக் காலத்தில். கடந்த 8 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. 

கிட்டத்தட்ட 30-40 நாட்களுக்கு முன்னதாகவே சென்னையில் இருந்து போக வர டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு, பயண திட்டமும்  தயார் நிலையில் இருந்தது. அனைவரும் அந்த நாளுக்காக வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது.  

நாள் 1:

7 மணி ரயிலுக்கு 5 மணிக்கே அலுவலகத்திலிருந்து கிளம்பியாகிவிட்டது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் சென்று அங்கிருந்து சிறப்பு ரயிலான நாகர்கோவில் விரைவு வண்டியில் சாத்தூர் செல்கின்றோம். அனைவருக்கும் ஒரே பெட்டியில் இடம் கிடைத்தது ஏக மகிழ்ச்சி. வழக்கமான கூத்து மற்றும் கும்மாளங்களுடன் பயணம் இனிதே தொடங்கியது .

நாள் 2:

அதிகாலை மணி 04-30 மணிக்கு சாத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கியாகிவிட்டது. எவருடைய முகத்திலும் அந்த நேரத்தில் பயண களைப்பே தெரியவில்லை. சாத்தூர் ரயில் நிலையத்தின் வெளியே எங்களுக்காக ஒரு Mini - Bus காத்துக் கொண்டிருந்தது. இரண்டு நாள் முழுக்க இந்த Mini - Bus - ல் தான் பயணம்.

ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, திருவேங்கடம் எனும் ஊரில் காலை 06:00 மணிக்கே சூடாக வடை, போண்டா மற்றும் Tea என காலை (சிறு) சிற்றுண்டியை முடித்துக்கொண்டு குற்றாலம் நோக்கி பயணம்.

காலை 08:00 மணியளவில் குற்றாலத்தை அடைந்து, அருவிகளில் குளிக்க ஆயத்தமானோம். வெயில் அற்ற குளுமையான சீதோஷ்ண நிலை மனதை இலகுவாக்கியது. காலை உணவுகளை அருகிலிருந்த கடைகளில் முடித்துக்கொண்டோம்,

முதலில் மெயினருவி: அன்றைய நாளில் முதல் அருவியாதலால் ஆர்வம் மிகுதியோடு மெயினருவி சென்றடைந்தோம் கையில் துண்டு மற்றும் மாற்று துணிகளோடு. மிக நீண்ட, காவலர்களால் வழிநடத்தப்படும் வரிசையில் அனைவரும் காத்திருந்தனர் ,நாங்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டோம். உடன் கொண்டு வந்த  துணி மணிகளை மூட்டையாக கட்டி பாதுகாப்பு அறைக்குள் வைத்தாயிற்று. இனி குளியல்தான்.

அருவியில் மிக வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் சராசரியாக தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. தண்ணீர் மேலே பட்டவுடன் ஏற்ப்பட்ட மகிழ்ச்சி சொல்லி மாளாது. சிறு குழந்தையைப் போல் மாறி 'ஓ ஓ ஊ' என்று கத்திக் கொண்டே அருவியில் குளித்தது மறக்க முடியாதது. (கத்தியதால் காவலரிடம் திட்டு வாங்கியது வேறு விஷயம்!?!?)

மெயினருவியிலிருந்து வெளியே வந்தவுடன் 'தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம்' சார்பாக மீன் வறுவல் கடை இருந்தது (அப்புறம் எப்படி மீன் வளர்ச்சி அடையும்?). அங்கு நண்பர்கள் மீன் வறுவலை அமுக்கிக் கொண்டிருந்தனர். வேறு சில நண்பர்களோடு நுங்கு மற்றும் பதநீரை, நுங்கு மாற ஓலைகளில் சாப்பிட்டோம். இப்போது பழைய குற்றால அருவியை நோக்கி பயணம் (7 KM)

பழைய குற்றாலம்: வண்டியில் இருந்து இறங்கியவுடன்  1 KM தூர மலைப் பாதையில் நடந்த பிறகு பிரம்மாண்டமாக இருந்தது பழைய குற்றாலம். மிக நீண்ட மலைப் பாறை, அதன் ஒரு பகுதியில் மட்டுமே தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. மெயினருவியில் இருந்தது போல் காவலர்களின் தலையீடு  அல்லாமல் ஒரே தள்ளு முள்ளுவாக இருந்ததனால் சரியாக குளிக்க முடியாமல் போனது வருத்தமே.. இருந்தாலும் நண்பர்கள் மகிழ்ச்சியுடனேயே குளித்தனர்.

மீண்டும் வரும் வழியில், மாங்காய் துண்டுகள், பலா துண்டுகள் என வாய்க்கும் வேலை கொடுத்துக் கொண்டே பேருந்தை அடைந்தோம். மற்ற நண்பர்கள் வரும் வரை பேருந்தின் மேலே ஏறி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு சாகச வேலைகள் செய்து கொண்டிருந்தோம். இப்போது புலியருவியை நோக்கிய பயணம்.

புலியருவி: மீண்டும் குற்றாலம் செல்லும் வழியில் மெயின் ரோட்டிலிருந்து ஒரு 600 மீ நடை பயணம். பெயருக்கேற்றாற்போல் அருவியில் தண்ணீர் மிக வேகமாக விழுந்து கொண்டிருந்தது. வழக்கம் போல சிறு குழந்தையாய் மாறி அருவிகளின் வேகத்திற்கு ஏற்ப குளித்தோம். சற்று கீழேயே அதே போல தண்ணீர் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அங்கேயும் குளித்தோம்.

மதிய உணவுக்காக, தங்கியிருந்த அறைக்கு வந்து துணி மணிகளை மாற்றிக்கொண்டு ஒரு சைவ உணவு கடைக்காக நடந்தோம் . 1.5KM கடந்து Hotel Archana வில் உணவருந்திவிட்டு மீண்டும் தங்கியிருந்த இடத்திற்கு வந்து இடைவேளியே அல்லாமல் ஐந்தருவியை நோக்கி புறப்பட்டோம்.

ஐந்தருவி: மலையிலிருந்து அருவி 5 பாகமாக சமசீர் இடைவெளியிட்டு கொட்டுகிறது (ஆம், மிக வேகமாக !!). 2 அருவிகளில் பெண்களுக்கும், 3 அருவிகளில் ஆண்களுக்கும் குளிக்க அனுமதித்திருந்தனர்.

மற்ற மூன்று அருவிகளில் குளித்தது போல் அல்லாமல் மிக வித்தியாசமான அனுபவம். தண்ணீர் துளிகள் முதுகில் படும் பொது எதி ஊசி வைத்து குத்துவதைப் போலவே உணர்ந்தும் அதே போல் தலையிலும், உடலிலும் அந்த வேகமான தண்ணீர் விழும் பொது ஒரு பெரிய கல் மேலே விழுவதை போலவே உணர்ந்தோம்.

அருவிகளை விட்டு வெளியே வர மனமில்லாமல் அங்கேயே மாலை தேனீர் அருந்திவிட்டு மீண்டும் பேருந்தை அடைந்தோம். தங்குமறை நோக்கி பயணப் பட்டோம். வழியில் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி  கழகத்தின் சார்பில் படகு குழாமில் படகு சவாரி.

படகு சவாரி: 4 பேர் ஒரு படகு என்று 6 மிதி படகுகளில் படகு சவாரி. ஆனந்தமாகும், அருமையாகவும் இருந்தது. அனைத்து படகுகளையும் ஒருசேர கொண்டு வந்து ஆர்ப்பரித்த அந்த தருணம் மறக்க முடியாதது.

தாங்கும் அறை வந்தடைந்து, துணி மணிகளை மாற்றிக் கொண்டு குற்றாலத்தில் இருந்து கன்னியாகுமரி செல்ல திட்டம்.

வழியில் கேரளா - தமிழ் நாடு எல்லைப் பகுதியில் 'ரஹமத் பார்டர் கடை' யில் இரவு உணவருந்திவிட்டு கன்னியாகுமரி நோக்கி விரைந்தோம்.

இரவு 1:30 மணியளவில் கன்னியாகுமரி வந்தடைந்தோம். 


0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena