Sunday, 2 August 2015

குற்றாலம் - கன்னியாகுமரி - II

குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 2:

குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 1

முதல் நாள் குற்றாலம் பயணத்தை முடித்துக்கொண்டு,

முன் அதிகாலை 01:30 மணியளவில் கன்னியாகுமரி வந்தடைந்தோம். இருவர் ஓர் அறையில் தங்குமாறு அறைகள் ஒதுக்கியிருந்தனர். பயணக் களைப்பில் உடனே உறக்கம்.

கன்னியாகுமரியில் விவேகானந்தபுரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி விவேகானந்தா கேந்திரா சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தனித் தனி கட்டிடங்களில் பல  வகையான அறைகள் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைத்துள்ளனர். மேலும் அறைகள் 2 தனித் தனிக் கட்டில்கள், மெத்தைகள், குளியலறை என மிக சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தது.

சூரிய உதயம்:

அதிகாலை 04:30 மணிக்கு எழுந்து சூரிய உதயத்தை காண ஆயத்தமானோம். 05:00 மணிக்கு உணவகம் திறக்கப்பட்டுவிடுகிறது. குளித்து முடித்த கையேடு தேநீர் அருந்திவிட்டு விவேகானந்தபுரம் பகுதியில் சூரிய உதயத்தைக் காண அமைந்துள்ள ஒரு View Point நோக்கி நடக்க துவங்கினோம். கேந்திர வளாகத்தை மிகவும் அருமையாக பராமரிக்கின்றனர்.

View Point - ன் வலது புறத்தில் கடலில் ஒரு 100 M அளவுக்கு கருங்கற்கள் கொட்டி அழகாக சூரிய உதயத்தை காண ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாகவே சென்ற காரணத்தால் காத்திருந்து.. காத்திருந்து அழகாக, ரம்மியமாக சூரிய உதயத்தை காண முடிந்தது. Photo Session முடித்துவிட்டு மீண்டும் அவரவர் அறைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

பிறகு அனைவரும் அவரவர் அறைகளை காலி செய்து விட்டு மீண்டும் விவேகானந்தா  கேந்திராவின் உணவகத்திலேயே மிக அருமையான சுவையான காலை  சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.  மேலும், விவேகானந்தா பாறைக்கு செல்ல தயாரானோம்.

விவேகானந்தர் மண்டபம்:

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து 'பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்' விவேகானந்தர் மண்டபத்திற்கும், பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து அளித்து வருகிறது. டிக்கெட் முன் பதிவு செய்ய காலை 09:00 மணிக்கே அத்தனை கூட்டம். தாழ்வான அலைகளின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கான படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  நாங்கள் அனைவரும் வரிசையில் நின்று விவேகானந்தர் பாறைக்கான டிக்கெட்டுகளை எடுத்துகொண்டு படகின் வருகைகாக காத்திருந்தோம்.

ஒரு 5 நிமிட பயணத்தில் விவேகானந்தர் பாறையை அடைந்தோம். மேலும் மண்டபத்திற்குள்ளே செல்ல தனி கட்டணம் வசூலிக்கின்றனர். கடலின் நடுவே அந்த மண்டபம் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்ததன் நினைவாக இந்த மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான விவேகானந்தர் சிலை மட்டுமல்லாது, ராமகிருஷ்ணர் மற்றும் சாரதா தேவியின் சிலைக்கும் அமையப்பெற்றுள்ளது அந்த மண்டபம். விவேகானந்தரின் நினைவாக ஒரு தியான மண்டபமும் அமையப்பெற்றுள்ளது.

திசை காட்டி, சூரிய நாட்காட்டி, புத்தக மற்றும் இதர  புகைப்பட விற்பனை நிலையங்களும் உள்ளன. விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் பாறை மற்றும் சிலையை பார்த்து பிரமிக்கத்தான் வேண்டும். மீண்டும் படகின் மூலமாக கன்னியாகுமரி கடற்கரையை அடைந்தோம். தேவி பகவதி அம்மனை வழயில் தரிசித்து விட்டு சுசீந்திரம் நோக்கிப் பயணமானோம்.

சுசீந்திரம்:

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள தாணுமாலயன் கோயிலை தரிசனம் செய்தோம். இக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்களும், இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபமும் உள்ளன. மேலும், இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன. மிகப் பெரிய தெப்பக் குளத்தை கடந்து நாங்கள் பத்மநாபபுரம் அரண்மனை நோக்கிப் பயணமானோம்.

பத்மநாபபுரம்:

பத்மநாபபுரம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரிலிருந்து கேரளா தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது . இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள்-1592-1609 என்பவரால் கட்டப்பட்டது.

இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:

  • மந்திர சாலை
  • தாய்க் கொட்டாரம்
  • நாடக சாலை
  • நான்கடுக்கு மாளிகை(உப்பரிகை மாளிகை)
  • தெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)
  • அன்னதான மண்டபம் 
  • சரஸ்வதி கோவில் 
  • நவராத்திரி மண்டபம் 

பத்மநாபபுரம் அரண்மனையின் வெளியே கைவினைப்  கடைகள் ஏகமாக இருந்தது. மேலும், மதிய உணவை கேரள வகை அரிசியில் அரண்மனையின் வெளியே உள்ள கடையிலேயே  முடித்துக்கொண்டோம்.  இப்போது நாகர்கோயிலுக்கு பயணம்.

பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கி பீடியாவை சொடுக்கவும்.

நாகர்கோவில்:

பத்மநாபபுரம் அரண்மனையை முடித்துகொண்டு, 2 நாள் பயணத்தினை நிறைவு செய்ய சென்னைக்கு அனந்தபுரி விரைவு வண்டியில் பயணிப்பதாக திட்டம். மாலை 06:50 மணிக்கு நாகர்கோவில் நிலையத்திலிருந்து வண்டி. நாங்கள் 04:00 மணிக்கே  வந்துவிட்டபடியால்  (திற்பரப்பு அருவியும், மாத்தூர் தொட்டிப் பாலம் ஆகியவைகளை நேரம் கருதி பார்க்க இயலாமல் போனதனால்) நாகர்கோவிலின்  பெயருக்கு காரணமான நாகராஜர் கோவிலுக்கு ஆட்டோ - வில் சென்றுவிட்டு, இரவு உணவுக்கான பார்சல்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ரயில் நிலையம்  திரும்பினோம்.

அனந்தபுரி ரயில் மெல்ல நாகர்கோவில் நிலையத்தை விட்டு விலகியபோதும், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி வீடு திரும்பும்போதும் மனது 2 நாட்களின் நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்தது.

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena