Friday 11 November 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் - எனது பார்வையில்

அண்ணா நூற்றாண்டு நூலகம் - மாற்றம் பற்றி பல்வேறு பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், இட்லிவடை ன் இந்த இடுகை எனது வலைப்பூவில்.

தினமணி தலையங்கம்:

"கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'"

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?

சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?

சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?

உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?

நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்! 


எனது சொந்தக்   கருத்து:

இந்நூலகம் 8 ஏக்கர் பரப்பில் தரைத்தளத்துடன் 8 மாடிகள் கொண்டு அமைந்துள்ளது. மாடிக்குச் செல்ல படிகள், தானியங்கி (லிஃப்ட்), எஸ்கலேட்டர் (நகர்வு தளம்) உள்ளது. முதல் தளம் குழந்தைகளுக்கானது. மற்றும் நாளிதழ்கள், சஞ்சிகைகள் என பொது நூல்களுக்கான தளமும் அங்கு உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. 5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகளும், 6-வது தளத்தில் அரசு ஆவணங்களும், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும், பிறவும் 8-வது மாடியில் அமைந்திருக்கிறன.

இந்த நூலகத்தின் முக்கியமான சிறப்பு குழந்தைகளுக்கான பகுதிதான். குழந்தைகள் தானாகவே செயல் வழிக் கற்றல் மூலம் படிக்கவும், ஆடிப் பாடி விளையாடவும், கணிணி மூலம் கற்கவும், பொழுது போக்கவும் மிகச் சிறப்பான வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்காண உள்நாட்டு, வெளிநாட்டுப் புத்தகங்கள் உள்ளன.  கண்ணைக் கவரும் ஓவியங்கள் சிறப்பு. குழந்தைகள் விளையாட தனியாக உள் விளையாட்டு அரங்கம் உள்ளது வெகு சிறப்பு. குழந்தைகளுக்கு வசதியாக முதல் தளத்திலேயே இவை அனைத்தும் அமைந்துள்ளன.

பல லட்சம் நூல்கள் கொள்ளளவு கொண்ட, 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய இந்நூலகத்தின் முக்கியமான சிறப்பு,  கூட்ட அரங்கு, கலை அரங்கு, கருத்தரங்கு என சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கும், 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளது தான்.

இந்நூலகம், முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.  மாற்றுத் திறன் உடையோர் எளிதில் வந்து செல்லும் வண்ணம் தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் சிறப்பு நூலக அரங்கும் தரைத் தளத்திலேயே அமைந்துள்ளது சிறப்பானது.  பொதுமக்கள் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் இந்நூலகத்தைப் பயன்படுத்தலாம். தானியங்கி வசதி கொண்ட இணைய மின் நூலகம் உள்ளதுடன் யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் அகலக் கற்றை (பிராட் பேண்ட்) மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட, 180 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்நூலகம் தமிழக அரசின் மிகப் பெரிய சாதனை என்றால் அது மிகையில்லை. ஆனால் இந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கிராம, நகர்ப்புற நூலகங்களை மேலும் தரம் உயர்த்தினால் அது பலரும் வந்து வாசிக்க வழி வகுக்கும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களுமே புதிய புத்தகங்கள். நீங்கள் எழுதியிருப்பது போல பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்ற புத்தகங்கள் இங்கு வைக்கப்படவில்லை. 

தினமணி தலையங்கத்தில் ஏதோ நூலகத்தை அதிமுக அரசு அகற்றக்கூடாது என்பதற்காக எழுதப்பட்டதுபோல தெரிந்தாலும்கூட, ஒரு சொம்பு பாலில் ஒரு துளி விஷத்தைக் கலப்பதைப்போல எழுதப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக் காட்டாமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.

கொசுறு:
நல்லவேளை!கோபாலபுரமும்,போயஸ் தோட்டமும் மிக அருகாமையில் உள்ளன இல்லையென்றால் கூடங்குளம் மின் நிலையம் கோபாலபுரதிற்கு மாற்றப்பட்டிருக்கும்!

நாயர்: பீச் பக்கம் இருக்கும் கண்ணகி எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
மாடிப்படி மாது: ராணிமேரிகல்லூரி!!! அதை மறந்துட்டீங்களே! 

தமிழ்நாடு அடுத்த 55 மாதங்களுக்கு எதிர்நீச்சல்தான்!

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena