அகரம் வழிகாட்டிகள் - குட்டீஸ் உலகம் (பிப்-2013) காக எழுதியது....
நல்ல பண்புடையவர்களை நாம் நண்பர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும், அவர்களின் குணங்களை நாமும் கடைபிடிக்க வேண்டும். அவர்களால் தான் இவ்வுலகம் செயல்படுகிறது. இதனை,
பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மண்
என்று வள்ளுவர் கூறுகிறார். நாம் செய்கின்ற நல்ல செயல்களே நமது பண்பாகும். மேலும் நல்ல செயல்கள் நல்ல சிந்தனையின் மூலம் வெளிப்படும்.
தோட்டத்தில் எத்தனை எத்தனை மரங்கள்... அதில் எத்தனை எத்தனை மலர்கள், இலைகள், பழங்கள்... இவைகளெல்லாம்.. நான் இனிப்பாய் இருக்கிறேன்., நீ கசப்பாய் இருக்கிறாய்., என் இலைகள் பச்சை, உன் இலைகள் பழுப்பு என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதில்லை. ஏன் விலங்குகள் கூட உணவைத் தவிர்த்து பிறவற்றிற்கு சண்டையிடுவதில்லை. ஆனால் மனிதர்கள்......?
சரி! நல்ல பண்புகளை எப்படித்தான் வளர்த்துக் கொள்வது? நல்ல நல்ல புத்தகங்களைப் படிக்கலாம், பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்கலாம். அவையே நாளடைவில் நமக்கு பழக்கமாகிவிடும். பழக்கம் எப்படி வரும்? சிறு உதாரணம் மூலம் பார்ப்போமா!
பூந்தொட்டியில் விதையிட்டு நீர் ஊற்றுங்கள், சிறிதாய் செடி முளைத்து வரும். செடியை வளைத்து நூலினால் கட்டுங்கள். சில நாட்களுக்குப் பிறகு நூலினை வெட்டி விடுங்கள். ஆனாலும், செடி செங்குத்தாய் வளராமல் வளைந்தே வளரும். ஏனென்றால், செடி அவ்வாறு பழக்கப்பட்டிருகிறது. அதனைப் போலவே நாமும் நல்ல பண்புகளை தொடர்ந்து செய்தால் அதுவே நமக்கு பழக்கமாகும்.
இதனைத்தான் ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளருமா? என்று கூறுவர். எனவே, நாம் நல்ல பண்புகளை சிறு வயதிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். கோபம், பொறாமை, பொய் சொல்லுதல் போன்ற தீய குணங்களை விட்டுவிட வேண்டும். நல்ல பண்புகளை பழக்கப்படுத்திக் கொண்டு பண்புடன் வாழ வேண்டும்.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment