Sunday, 2 August 2015

குற்றாலம் - கன்னியாகுமரி - II

குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 2:

குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 1

முதல் நாள் குற்றாலம் பயணத்தை முடித்துக்கொண்டு,

முன் அதிகாலை 01:30 மணியளவில் கன்னியாகுமரி வந்தடைந்தோம். இருவர் ஓர் அறையில் தங்குமாறு அறைகள் ஒதுக்கியிருந்தனர். பயணக் களைப்பில் உடனே உறக்கம்.

கன்னியாகுமரியில் விவேகானந்தபுரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி விவேகானந்தா கேந்திரா சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தனித் தனி கட்டிடங்களில் பல  வகையான அறைகள் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைத்துள்ளனர். மேலும் அறைகள் 2 தனித் தனிக் கட்டில்கள், மெத்தைகள், குளியலறை என மிக சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தது.

சூரிய உதயம்:

அதிகாலை 04:30 மணிக்கு எழுந்து சூரிய உதயத்தை காண ஆயத்தமானோம். 05:00 மணிக்கு உணவகம் திறக்கப்பட்டுவிடுகிறது. குளித்து முடித்த கையேடு தேநீர் அருந்திவிட்டு விவேகானந்தபுரம் பகுதியில் சூரிய உதயத்தைக் காண அமைந்துள்ள ஒரு View Point நோக்கி நடக்க துவங்கினோம். கேந்திர வளாகத்தை மிகவும் அருமையாக பராமரிக்கின்றனர்.

View Point - ன் வலது புறத்தில் கடலில் ஒரு 100 M அளவுக்கு கருங்கற்கள் கொட்டி அழகாக சூரிய உதயத்தை காண ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாகவே சென்ற காரணத்தால் காத்திருந்து.. காத்திருந்து அழகாக, ரம்மியமாக சூரிய உதயத்தை காண முடிந்தது. Photo Session முடித்துவிட்டு மீண்டும் அவரவர் அறைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

பிறகு அனைவரும் அவரவர் அறைகளை காலி செய்து விட்டு மீண்டும் விவேகானந்தா  கேந்திராவின் உணவகத்திலேயே மிக அருமையான சுவையான காலை  சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.  மேலும், விவேகானந்தா பாறைக்கு செல்ல தயாரானோம்.

விவேகானந்தர் மண்டபம்:

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து 'பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்' விவேகானந்தர் மண்டபத்திற்கும், பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து அளித்து வருகிறது. டிக்கெட் முன் பதிவு செய்ய காலை 09:00 மணிக்கே அத்தனை கூட்டம். தாழ்வான அலைகளின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கான படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  நாங்கள் அனைவரும் வரிசையில் நின்று விவேகானந்தர் பாறைக்கான டிக்கெட்டுகளை எடுத்துகொண்டு படகின் வருகைகாக காத்திருந்தோம்.

ஒரு 5 நிமிட பயணத்தில் விவேகானந்தர் பாறையை அடைந்தோம். மேலும் மண்டபத்திற்குள்ளே செல்ல தனி கட்டணம் வசூலிக்கின்றனர். கடலின் நடுவே அந்த மண்டபம் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்ததன் நினைவாக இந்த மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான விவேகானந்தர் சிலை மட்டுமல்லாது, ராமகிருஷ்ணர் மற்றும் சாரதா தேவியின் சிலைக்கும் அமையப்பெற்றுள்ளது அந்த மண்டபம். விவேகானந்தரின் நினைவாக ஒரு தியான மண்டபமும் அமையப்பெற்றுள்ளது.

திசை காட்டி, சூரிய நாட்காட்டி, புத்தக மற்றும் இதர  புகைப்பட விற்பனை நிலையங்களும் உள்ளன. விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் பாறை மற்றும் சிலையை பார்த்து பிரமிக்கத்தான் வேண்டும். மீண்டும் படகின் மூலமாக கன்னியாகுமரி கடற்கரையை அடைந்தோம். தேவி பகவதி அம்மனை வழயில் தரிசித்து விட்டு சுசீந்திரம் நோக்கிப் பயணமானோம்.

சுசீந்திரம்:

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள தாணுமாலயன் கோயிலை தரிசனம் செய்தோம். இக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்களும், இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபமும் உள்ளன. மேலும், இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன. மிகப் பெரிய தெப்பக் குளத்தை கடந்து நாங்கள் பத்மநாபபுரம் அரண்மனை நோக்கிப் பயணமானோம்.

பத்மநாபபுரம்:

பத்மநாபபுரம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரிலிருந்து கேரளா தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது . இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள்-1592-1609 என்பவரால் கட்டப்பட்டது.

இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:

  • மந்திர சாலை
  • தாய்க் கொட்டாரம்
  • நாடக சாலை
  • நான்கடுக்கு மாளிகை(உப்பரிகை மாளிகை)
  • தெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)
  • அன்னதான மண்டபம் 
  • சரஸ்வதி கோவில் 
  • நவராத்திரி மண்டபம் 

பத்மநாபபுரம் அரண்மனையின் வெளியே கைவினைப்  கடைகள் ஏகமாக இருந்தது. மேலும், மதிய உணவை கேரள வகை அரிசியில் அரண்மனையின் வெளியே உள்ள கடையிலேயே  முடித்துக்கொண்டோம்.  இப்போது நாகர்கோயிலுக்கு பயணம்.

பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கி பீடியாவை சொடுக்கவும்.

நாகர்கோவில்:

பத்மநாபபுரம் அரண்மனையை முடித்துகொண்டு, 2 நாள் பயணத்தினை நிறைவு செய்ய சென்னைக்கு அனந்தபுரி விரைவு வண்டியில் பயணிப்பதாக திட்டம். மாலை 06:50 மணிக்கு நாகர்கோவில் நிலையத்திலிருந்து வண்டி. நாங்கள் 04:00 மணிக்கே  வந்துவிட்டபடியால்  (திற்பரப்பு அருவியும், மாத்தூர் தொட்டிப் பாலம் ஆகியவைகளை நேரம் கருதி பார்க்க இயலாமல் போனதனால்) நாகர்கோவிலின்  பெயருக்கு காரணமான நாகராஜர் கோவிலுக்கு ஆட்டோ - வில் சென்றுவிட்டு, இரவு உணவுக்கான பார்சல்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ரயில் நிலையம்  திரும்பினோம்.

அனந்தபுரி ரயில் மெல்ல நாகர்கோவில் நிலையத்தை விட்டு விலகியபோதும், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி வீடு திரும்பும்போதும் மனது 2 நாட்களின் நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்தது.
Read More

குற்றாலம் - கன்னியாகுமரி - I

இரண்டு நாட்கள் அலுவலகத்தில் இருந்து குற்றாலம் - கன்னியாகுமரி சுற்றுலா. Official (அ) Un-Official என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். என்னுடைய பணிக் காலத்தில். கடந்த 8 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. 

கிட்டத்தட்ட 30-40 நாட்களுக்கு முன்னதாகவே சென்னையில் இருந்து போக வர டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு, பயண திட்டமும்  தயார் நிலையில் இருந்தது. அனைவரும் அந்த நாளுக்காக வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது.  

நாள் 1:

7 மணி ரயிலுக்கு 5 மணிக்கே அலுவலகத்திலிருந்து கிளம்பியாகிவிட்டது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் சென்று அங்கிருந்து சிறப்பு ரயிலான நாகர்கோவில் விரைவு வண்டியில் சாத்தூர் செல்கின்றோம். அனைவருக்கும் ஒரே பெட்டியில் இடம் கிடைத்தது ஏக மகிழ்ச்சி. வழக்கமான கூத்து மற்றும் கும்மாளங்களுடன் பயணம் இனிதே தொடங்கியது .

நாள் 2:

அதிகாலை மணி 04-30 மணிக்கு சாத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கியாகிவிட்டது. எவருடைய முகத்திலும் அந்த நேரத்தில் பயண களைப்பே தெரியவில்லை. சாத்தூர் ரயில் நிலையத்தின் வெளியே எங்களுக்காக ஒரு Mini - Bus காத்துக் கொண்டிருந்தது. இரண்டு நாள் முழுக்க இந்த Mini - Bus - ல் தான் பயணம்.

ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, திருவேங்கடம் எனும் ஊரில் காலை 06:00 மணிக்கே சூடாக வடை, போண்டா மற்றும் Tea என காலை (சிறு) சிற்றுண்டியை முடித்துக்கொண்டு குற்றாலம் நோக்கி பயணம்.

காலை 08:00 மணியளவில் குற்றாலத்தை அடைந்து, அருவிகளில் குளிக்க ஆயத்தமானோம். வெயில் அற்ற குளுமையான சீதோஷ்ண நிலை மனதை இலகுவாக்கியது. காலை உணவுகளை அருகிலிருந்த கடைகளில் முடித்துக்கொண்டோம்,

முதலில் மெயினருவி: அன்றைய நாளில் முதல் அருவியாதலால் ஆர்வம் மிகுதியோடு மெயினருவி சென்றடைந்தோம் கையில் துண்டு மற்றும் மாற்று துணிகளோடு. மிக நீண்ட, காவலர்களால் வழிநடத்தப்படும் வரிசையில் அனைவரும் காத்திருந்தனர் ,நாங்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டோம். உடன் கொண்டு வந்த  துணி மணிகளை மூட்டையாக கட்டி பாதுகாப்பு அறைக்குள் வைத்தாயிற்று. இனி குளியல்தான்.

அருவியில் மிக வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் சராசரியாக தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. தண்ணீர் மேலே பட்டவுடன் ஏற்ப்பட்ட மகிழ்ச்சி சொல்லி மாளாது. சிறு குழந்தையைப் போல் மாறி 'ஓ ஓ ஊ' என்று கத்திக் கொண்டே அருவியில் குளித்தது மறக்க முடியாதது. (கத்தியதால் காவலரிடம் திட்டு வாங்கியது வேறு விஷயம்!?!?)

மெயினருவியிலிருந்து வெளியே வந்தவுடன் 'தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம்' சார்பாக மீன் வறுவல் கடை இருந்தது (அப்புறம் எப்படி மீன் வளர்ச்சி அடையும்?). அங்கு நண்பர்கள் மீன் வறுவலை அமுக்கிக் கொண்டிருந்தனர். வேறு சில நண்பர்களோடு நுங்கு மற்றும் பதநீரை, நுங்கு மாற ஓலைகளில் சாப்பிட்டோம். இப்போது பழைய குற்றால அருவியை நோக்கி பயணம் (7 KM)

பழைய குற்றாலம்: வண்டியில் இருந்து இறங்கியவுடன்  1 KM தூர மலைப் பாதையில் நடந்த பிறகு பிரம்மாண்டமாக இருந்தது பழைய குற்றாலம். மிக நீண்ட மலைப் பாறை, அதன் ஒரு பகுதியில் மட்டுமே தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. மெயினருவியில் இருந்தது போல் காவலர்களின் தலையீடு  அல்லாமல் ஒரே தள்ளு முள்ளுவாக இருந்ததனால் சரியாக குளிக்க முடியாமல் போனது வருத்தமே.. இருந்தாலும் நண்பர்கள் மகிழ்ச்சியுடனேயே குளித்தனர்.

மீண்டும் வரும் வழியில், மாங்காய் துண்டுகள், பலா துண்டுகள் என வாய்க்கும் வேலை கொடுத்துக் கொண்டே பேருந்தை அடைந்தோம். மற்ற நண்பர்கள் வரும் வரை பேருந்தின் மேலே ஏறி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு சாகச வேலைகள் செய்து கொண்டிருந்தோம். இப்போது புலியருவியை நோக்கிய பயணம்.

புலியருவி: மீண்டும் குற்றாலம் செல்லும் வழியில் மெயின் ரோட்டிலிருந்து ஒரு 600 மீ நடை பயணம். பெயருக்கேற்றாற்போல் அருவியில் தண்ணீர் மிக வேகமாக விழுந்து கொண்டிருந்தது. வழக்கம் போல சிறு குழந்தையாய் மாறி அருவிகளின் வேகத்திற்கு ஏற்ப குளித்தோம். சற்று கீழேயே அதே போல தண்ணீர் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அங்கேயும் குளித்தோம்.

மதிய உணவுக்காக, தங்கியிருந்த அறைக்கு வந்து துணி மணிகளை மாற்றிக்கொண்டு ஒரு சைவ உணவு கடைக்காக நடந்தோம் . 1.5KM கடந்து Hotel Archana வில் உணவருந்திவிட்டு மீண்டும் தங்கியிருந்த இடத்திற்கு வந்து இடைவேளியே அல்லாமல் ஐந்தருவியை நோக்கி புறப்பட்டோம்.

ஐந்தருவி: மலையிலிருந்து அருவி 5 பாகமாக சமசீர் இடைவெளியிட்டு கொட்டுகிறது (ஆம், மிக வேகமாக !!). 2 அருவிகளில் பெண்களுக்கும், 3 அருவிகளில் ஆண்களுக்கும் குளிக்க அனுமதித்திருந்தனர்.

மற்ற மூன்று அருவிகளில் குளித்தது போல் அல்லாமல் மிக வித்தியாசமான அனுபவம். தண்ணீர் துளிகள் முதுகில் படும் பொது எதி ஊசி வைத்து குத்துவதைப் போலவே உணர்ந்தும் அதே போல் தலையிலும், உடலிலும் அந்த வேகமான தண்ணீர் விழும் பொது ஒரு பெரிய கல் மேலே விழுவதை போலவே உணர்ந்தோம்.

அருவிகளை விட்டு வெளியே வர மனமில்லாமல் அங்கேயே மாலை தேனீர் அருந்திவிட்டு மீண்டும் பேருந்தை அடைந்தோம். தங்குமறை நோக்கி பயணப் பட்டோம். வழியில் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி  கழகத்தின் சார்பில் படகு குழாமில் படகு சவாரி.

படகு சவாரி: 4 பேர் ஒரு படகு என்று 6 மிதி படகுகளில் படகு சவாரி. ஆனந்தமாகும், அருமையாகவும் இருந்தது. அனைத்து படகுகளையும் ஒருசேர கொண்டு வந்து ஆர்ப்பரித்த அந்த தருணம் மறக்க முடியாதது.

தாங்கும் அறை வந்தடைந்து, துணி மணிகளை மாற்றிக் கொண்டு குற்றாலத்தில் இருந்து கன்னியாகுமரி செல்ல திட்டம்.

வழியில் கேரளா - தமிழ் நாடு எல்லைப் பகுதியில் 'ரஹமத் பார்டர் கடை' யில் இரவு உணவருந்திவிட்டு கன்னியாகுமரி நோக்கி விரைந்தோம்.

இரவு 1:30 மணியளவில் கன்னியாகுமரி வந்தடைந்தோம். 


Read More

Thursday, 30 July 2015

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் - அஞ்சலி



ஏழ்மையில் பிறந்து, எழுச்சி அடைந்து,
எளிமையை விரும்பி,
எண்ணியவையை சாதித்த,
எதார்த்த உள்ளமே!!

எத்தனை எழுச்சி உரைகள்,
அத்தனையும் புதிய முயற்சிக்கான
வரைமுறைகள்!!

எத்தனை அறிவியல் ஆராய்ச்சிகள்,
அத்தனையும் நாட்டின் வளர்ச்சிக்கான படிகள்!!

எத்தனை விருதுகள் கையில்,
அத்தனையும் தலையில் ஏற்றாத
உழைப்பின் உருவ வடிவங்கள்!!

ஓய்வுகாலத்திலும் ஓயாமல் ஒருமனதாய்
மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக,
மக்களுக்காக பணியாற்றிய
பெருமைக்குரிய பேராசிரியரே!!!

உங்கள் இழப்பு எக்காலத்திலும் ஈடு மட்டுமல்ல
சமன் செய்யக் கூட இயலாது!!!

நன்றி: த. ராஜ் குமார் (RCS) 
Read More

Friday, 2 January 2015

2014 ஆண்டு அனுபவங்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் - 2015

01-Jan-2014 முதல் 30-Dec-2014 வரை


Diary, Flashback, ஆண்டறிக்கை, Annual Report எழுதுகின்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை (தன்னடக்கமே :-) ). இருந்தாலும் சென்ற 2014 ஆம் ஆண்டு இனிதே பல நல்ல விதைகளை தூவிச் சென்றுள்ளது. 

2014 தொடக்கம் முதலே வெகு நேர்த்தியாக அமைந்தது. வேலை நிமித்தமாக பெங்களூர், மும்பை என பயணம் அதிகம் செய்த ஆண்டாகவும், பதவி உயர்வு கொடுத்து மேலும் பணிச்சுமை (சுகமான) அதிகரித்த ஆண்டாகவும், வாழ்வின் மிகப் பெரிய நிகழ்வான திருமணம் நடந்தேறிய ஆண்டாகவும் அமைந்தது.

இந்த விதைகள் அனைத்தும் விருட்சங்களாக இந்த 2015 ஆண்டு கை கொடுக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்கின்றேன்.

31-Dec-2014

சன் டிவி கவுண்ட் டவுன், சகல கல வல்லவன் திரைப்பட "Happy New Year" பாடல், பழைய நண்பர்களுடன் உரையாடல் மற்றும் வாழ்த்துக்கள் பரிமாற்றம் என்று களை கட்டியது 2015 ஆம் ஆண்டு புத்தாண்டு துவக்கம். மீண்டும் வழக்கமாக ஷாலோம் மேன்ஷன் - ல் இருந்தே துவங்கியது.

01-Jan-2015

உற்சாகமான புத்தாண்டு தினம். மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயம் தொடங்கி, தி. நகர் வெங்கட்நாராயணா சாலை திருப்பதி தேவஸ்தானம் பெருமாள் தரிசனம்.

சுமார் இரண்டு  மீட்டர் நீளத்திற்கு வரிசை. புத்தாண்டு அன்று மட்டும் மக்களுக்கு எங்கிருந்து தான் இந்த பக்தி, ஆன்மீக உணர்வு வருகிறதோ என்றே நினைக்க தொன்றுகிறது.  சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு திவ்ய தரிசனம். மனசெல்லாம் மகிழ்ச்சி. பல வகையான மனிதர்களை இந்த இரண்டு மணி நேரத்தில் சந்திக்க முடிந்தது.

மேலும், மாலையில் நண்பர்கள் முருகானந்தம், மணி மற்றும் சரவணா ஆகியோருடன் பெசன்ட் நகர் கடற்கரையில் உற்சாகமான உரையாடல்கள், நல்ல சுத்தமான காற்று மற்றும் கடற்கரையோர உலாவல். 

புத்தாண்டு தின கொண்டாட்டங்களை நிறைவு செய்யும் விதமாக அடையாறு "The Store" என்ற பெயரிலான உணவகத்தில் இரவு உணவு. வகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட  இந்த உணவகத்தின் Tag Line மிகவும் பிடித்திருந்தது. 

Come 
Play 
Eat 

ஆம். உள்ளரங்கில் விளையாடக் கூடிய Snookers, Games Console மற்றும் பல விளையாட்டுக்கள் இந்த உணவத்தின் உள்ளேயே உள்ளன. உணவு Order செய்துவிட்டு வரும் வரை விளையாடிவிட்டு உணவருந்தலாம். ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.

அனைவருக்கும் 2015 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
Read More

Thursday, 1 January 2015

Happy New Year and Book Fair 2015

Wish you all a very Happy and Prosperous New Year 2015..

As usual, January brings us with loads of festivals like New Year, Pongal, Sangeetha Season, Republic Day, Mylapore Festival and none other than Chennai Book Fair.

And here comes the details of 38th Chennai Book Fair @ Chennai.


Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena