Tuesday 22 January 2013

புத்தக காட்சி - 2013


ஜனவரி மாதம், பொங்கலுக்குப் பிறகு எதிர்பார்க்கும் மற்றொரு நிகழ்வு புத்தகக் காட்சி. வலைப் பூ எழுத ஆரம்பித்து பல வருடங்கள் :-) ஆனாலும் புத்தகக் காட்சி பற்றி எழுதும் முதல் பதிவு. இம்முறை எ. ஆர். ரஹ்மானுக்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும். 29-Dec-2012  நிகழ்ச்சி என்பதாலேயே புத்தகக் காட்சி சுமார் ஒரு வாரம் தள்ளிப் போனதாகவும், செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் சென்னை மெட்ரோ ரயில் வேலைகளாலும் YMCA மைதானத்துக்கு இடம் மாறியதாகவும் பரவலாக தகவல்.

எது எப்படியோ, இந்த முறை புத்தகக் காட்சி மைதானம் பிரம்மாண்டமான இடத்தில் நடந்தது. சென்னையின் மிக முக்கியமான இடமான அண்ணா சாலையில் இவ்வளவு பெரிய கல்லூரி மைதானமா என வந்திருந்த அனைவருமே ஆச்சர்யப்பட்டனர். நுழைவாயிலில் இருந்து சுமார் 1 KM நடந்து செல்ல வேண்டிய நிலை. (Parking காட்சி அரங்கத்தின் அருகில் அமைத்திருந்தால் வயதானவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்).

மொத்தம் 587 அரங்குகள், 14 பாதைகள். அனைத்து பாதைகளுக்கும் வழக்கம் போல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பெயர்கள். இம்முறை பாதைகள் மற்றும் ஸ்டால்கள் மிகவும் குறுகலாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் வாசகர்களின் வருகை மிக அதிகம். அனைத்து ஸ்டால்களுக்கும் சென்று வர கண்டிப்பாக 1 நாள் தேவைப்படும்.

கிழக்கு, ஆனந்த விகடன், Higginbothams அரங்குகளில் நல்ல வாசகர் எண்ணிக்கை. இம்முறையும், CD, DVD விற்பனை அரங்குகள் அதிகம் காணப்பட்டன. புதிய முயற்சியாக, கிழக்கு பதிப்பகத்தின் மின் புத்தகங்கள், அதற்கான தேவை மற்றும் எதிர்காலங்கள் பற்றிய அரங்கமும், பாதை நிறுவனத்தாரின் Audio புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களும் கிடைத்தன,

எஸ். ராமகிருஷ்ணன், ஞானி, பழ நெடுமாறன், மனுஷ்யபுத்திரன், பவா செல்லத்துரை, சைலஜா உள்ளிட்ட எழுத்தாளர்களையும், கரு. பழனியப்பன், வசந்த பாலன் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்களையும் சந்திக்கும், உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

15 புத்தகங்கள் வாங்கியுள்ளேன். இப் புத்தகங்கள் அனைத்தும் சென்ற 1 ஆண்டாக அதன் மதிப்புரைகளை படித்து குறித்து வைத்தது.(இன்னொரு தனிப் பதிவில் பட்டியலிடுகிறேன்). கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும், அத்தனை புத்தகங்களையும் பத்திரமாக எடுத்து செல்ல  பெரிய பை கொடுத்தனர். (இம்முறை, Plastic பைகளுக்குத் தடை)

புத்தக காட்சி முடிந்து வெளியில் வந்த போது பையும், மனமும் நிறைந்திருந்தது. கால் வலியுடன்... (வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்... :-))


0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena