Thursday, 26 September 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை


தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும்.



இடம்:

டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:
  • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
  • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
நேரம்:
  • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
  • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.
நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.



நிகழ்ச்சி நிரல்

நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
  • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
    • தமிழ்த் தட்டச்சு
    • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
    • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
    • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
  • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
    • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
    • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
    • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
    • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?
மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
  • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
  • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
  • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
  • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
  • நன்றியுரை (3 நிமிடங்கள்)
Read More

Friday, 20 September 2013

நாய் பாசம்


தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். இரவு மணி சுமார் 11 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும். ஆள் அரவமில்லாத அந்த தெருவில் இரவு நேரத்து வாசிகளான நாய்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன.

4 முதல் 5 தெரு நாய்கள் ஒன்றாக நின்றுகொண்டிருந்தன ஒரு வீட்டின் முன்னால். அதே வீட்டினுள்ளிருந்து எஜமானருடன் மேல் ஜாதி வகை நாய் நடை பயிற்சிக்காக (வாக்கிங்) வந்து கொண்டிருந்தது. எஜமானர் மற்ற தெரு நாய்களின் அட்டகாசத்தை பார்த்துவிட்டு தனது மேல் ஜாதி நாயிடம்,

"ஜிம்மி போகாதே, அங்கே நாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. பார்த்தால் உன்னை கடித்துவிடும்!!!" 

என்று உரையாடுகின்றார். இதை நாய் பாசம் என்பதெல்லாமல் வேறேன்பது?
Read More

Friday, 13 September 2013

தலை காவிரி முதல் கடை காவிரி வரை

குடகு மலையில் உருவாகும் காவிரி பிரம்மாண்டமாக பல மைல் கடந்து, பல நிலங்கள் கடந்து, சில அணைகளுள் அகப்பட்டு, பல ஆற்றோரங்களை கடந்து, பல மனிதர்களை கடந்து, கடை மடைப் பகுதிகளை செம்மையாக்கி கடைசியில் ஆடு தாண்டும் காவிரியாக மாறி கடலில் இணைகிறது.

இந்த காவிரியின் பயணத்தை, 'நடந்தாய் வாழி காவேரி' எனும் நூலில் தி. ஜானகிராமன் மிகவும் அருமையாக, அனுபவப் பூர்வமாக பயணித்து எழுதியிருப்பார். பயணித்த காலம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னதாக இருக்கும். 

சமீபத்தில், அதீதம் தளத்தில் 'விண்ணோடு விரியும் விழிகள் - காவிரியின் கதை' என்ற பெயரில் தலை காவிரி முதல் கடை காவிரி வரையுள்ள பயணத்தை 'ஸ்வர்ண லக்ஷ்மி' அவர்கள் எழுதியுள்ளார். மிக சிறப்பாக படங்களுடனும் 4 பாகமாக விளக்கியுள்ளார். கீழ் காணும் சுட்டிகள் தங்களை கட்டுரைகளுக்கு அழைத்து செல்லும்.





நன்றி: அதீதம், ஸ்வர்ண லக்ஷ்மி.
Read More

Thursday, 5 September 2013

மேன்ஷன் வாழ்க்கை கவிதைகள்


மேன்ஷன் வாழ்க்கையைப் பற்றி வந்த தமிழின் முதல் கவிதைத் தொகுப்பு என அறியப்படுகிறது, பவுத்த அய்யனாரின் "மேன்ஷன் கவிதைகள்"

1. இந்த அறையை நோக்கி
பூமியின் எப்பகுதியிலிருந்தும்
ஒரு கடிதம்கூட எட்டிப்பார்த்ததில்லை

இந்த அறைக்கு
நண்பர் என்றுசொன்ன
எந்த மனிதரின் காலடியும் பட்டதில்லை

பறவையின் குரல்
நாயின் குரல்
வானின் குரல்

எதுவும் தொட்டதில்லை

சூரியனின் கதிருக்குக்
காத்திருந்து காத்திருந்து
மனமொடிந்ததுதான் மிச்சம்

காற்று மட்டும்
அறீயாமல் வந்து
உயிரைக் காப்பாற்றுகிறது

அறையும் நானும்
காத்திருக்கிறோம்
அறிமுகமான
மனித முகம் வேண்டி

2. அறையும் நானுமாய்
இரவைக் கழிக்கிறோம்
தூங்காத அறையுடன் சேர்ந்து
நானும் தூக்கத்தைத் துரத்திவிடுகிறேன்

எங்களுக்குள் பல ரகசியங்கள் உண்டு
யாரிடமும் எதுவும் கூறாத இந்த அறை
என் நண்பனைவிட உசத்தி

செருப்பும் அறைக்குள்தான்
குடிதண்ணீரும் குளிக்கும் தண்ணீரும் இதற்குள்தான்
புத்தகங்கள் துணிகள்
ஷேவிங் செட் கண்ணாடி
இன்னபிற என
எல்லாம் இந்த அறைக்குள்தான்

அறை என் வீடு
ஆனால் --
வீடு என்பது அறையா

3. வீசிவிட்டுச் சென்ற
ஒரே ஒரு சொல்
என் அறைக்குள்
சுற்றிச் சுற்றி வருகிறது

விர்ர்ர்ர்ரென்று
விஷக்குளவியாய்
மறைந்து திரிந்து
முகத்தில் அடிக்கிறது

ஒடிவிடுகிறது என நினைத்த நிமிஷம்
கதவிடுக்கிலிருந்து வருகிறது

தூங்கும் போதெல்லாம்
பறந்து நிரப்புகிறது
கனவை

மின்விசிறியோடு சுழன்று
நூறாய் ஆயிரமாய் இலட்சமாய் மாறி
நிரப்புகிறது அறையை

என் செல்போன் இசையைத்
தன் சிறகோசை கொண்டு
நிரப்புகிறது

நிரப்புகிறது
என் மயிர்க்கால் ஒவ்வொன்றையும்
தன் கொடுக்கு முனையால்

4. வான் நடுவில் தொங்கும்
உறையற்ற கத்தி
எப்போதும் குறிபார்க்கிறது
என் உச்சந்தலையை

காங்கீரிட் கட்டடம்
கடல்மலைகாடு
பூமிச்சுரங்கம்
ஒளிந்து மறைந்தாலும்
விடுவதாய் இல்லை

எங்கு சென்றாலும்
கூடவே வருகிறது

கண்முன்னால் வந்து
கண்ணாமூச்சி காட்டும்
ஓடஓட விரட்டும்
பதுங்கிப் பாயும்
ஒழிந்ததுபோல் போக்குக்காட்டி
மீண்டும் ஒடிவரும்

மனமெங்கும் கத்தி
ஞாபகமாய் உறைய
மனமே கத்தியானது

5. முள் முளைத்த முகமாய்
யார் யார் முகமோ எட்டிப்பார்க்க
என் முகம் மட்டும் வருவதே இல்லை

அவமான முகங்களைத் திறந்து திறந்து
இருக்கலாம் இறுதியில்
எனக்கும் ஒரு முகம்

6. வட்டத்திற்குள்ளோ
சதுரத்திற்குள்ளோ
முள்ளில் மாட்டிய என் நேரம்

7. இரவின் வாசனை
பூமியைப் போர்த்தும்போது
அறை
தானே தைத்துக்கொள்கிறது
தன் வாயை

நிரந்தரமாய் அறிந்தவர்கள்
யாருமில்லை நகரில்
அறியாத முகங்கள் பூதங்களாக
ஒடுங்கிப்போகிறேன் குழந்தையாய்

புறம்பேசுபவன்
பொய்யன்
உளவாளி
பிலிம்காட்டுபவன்
துரோகி
பெண்பித்தன்
தளும்புக்காரன்
அப்பாவி
ஆடம்பரக்காரன்
ஆபத்தானவன்
ஆண்மையற்றவன்

தங்கள் தங்கள்
அடையாளம் ஒட்டி ஒட்டி
சரிபார்க்கின்றனர்
எல்லோரும்

கற்பனை அடையாளங்கள்
என் கழுத்தில்

கண் காணாத்தூரத்தில்
பனை ஒலைக்குள்
பதுங்கிக் கிடக்கும்
என் அடையாளம்

என் அடையாளம்
அறியாமனிதர்கள் அறிய
குறியிடப்படாத துணியாய்
அலைகிறது என் உடல்

8. அறைக்குள்
அறைந்து தள்ளி
பூட்டிவிடுகிற்து இரவு

சுவாசிக்கக் காற்றின்றி
ஒரு பிணம்போல்
கிடக்கிறது என் உடல்

புத்தகங்கள்
காசுக்கு வாங்கிய தண்ணீர்
அரைகுறை ஆடை அழகி
பிள்ளையார்பட்டி பிள்ளையார்
புத்தரின் கண்
எப்போதும் என்னைப் பார்த்திருக்க
இரும்புக் கட்டிலில் ஒரு இரும்பாக
கிடக்கிறது என் உடல்

உடல் கட்டிலில் கிடக்க
மனம்
என்னை விட்டு அகலும்

ஒர் இரவுத்தூரத்தில் மனைவி

தெரிந்த பெண்களின்
முகங்கள் அலைய
கழிகிறது நீண்ட இரவு

என் மனம் உதிர்க்கும்
வார்த்தைகள் பார்க்க
யாருமில்லாத

அறைக்குள்
ஒர் இரவுத் தூரமாக
நிரம்பிக் கிடக்கிறது
மாநகரச் சூன்யம்

9. ஈட்டியால் குத்துங்கள்
பீறிட்டு வழியட்டும் என் பயம்

மறுபடியும் -
ஈட்டியால் குத்துங்கள்
வெளியேறட்டும் பயத்தின் ஆவி

ஆனாலும் அவ்வப்போது
உணவோடு சேர்த்து
பயத்தை விழுங்கிறேன்

தனி அறைக்குள்
பயத்தை விசிறியடிக்கிறது
மின் விசிறி

உடல் முழுக்க முள்ளாய்க் குத்தி நிற்கும்
சொற்களை
ஒவ்வொன்றாய்ப் பிடுங்கிப் போடுகிறேன்
மீண்டும் மீண்டும் ஒட்டிக்கொள்கிறது

ஆழத்தில் போய்த்
தைத்துக்கொள்கிறது

பிரமாண்ட நகரின்
சிறிய குடுவைக்குள்
மின்விசிறி
நான்

நன்றி - மேன்ஷன் கவிதைகள் - பவுத்த அய்யனார், சித்தார்த்தா வெளியீடு
Read More

Wednesday, 4 September 2013

விளம்பர உலகம்

ஒரு பொருள், சேவை, தகவல் மக்களை சென்றடைய விளம்பரங்கள் இன்றியமையாத வழி. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தகவல்கள் பரிமாற்றம் சுவர் ஓவியங்களினாலும், போஸ்டர் பிறகு பத்திரிக்கை, செய்தித் தாள், வானொலி, தொலைக் காட்சி வாயிலாகவும் அதன் பிறகு மின் அஞ்சல் மற்றும் இன்டர்நெட் வாயிலாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

கீழ்காணும் படத்தில் ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பு விளம்பரம். 



இந்த விளம்பரம் சென்னை, கன்னிமாரா நூலகத்தின்  நாளிதழ்/மாத இதழ்  பிரிவில் ஒரு பிரபல பத்திரிக்கையில் எழுதப் பட்டிருந்தது. அவரின் விளம்பர யுக்தியை கண்டு வியக்காமல் என்ன செய்ய !?...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena