சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் அவரால் ஓர் அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாகத் தொடர்ந்து ஆடி வரும் இவர், தேர்வுப் போட்டிகளில் 15,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18,000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார். - நன்றி: விக்கிபீடியா
ஒரு துறையில் இருபத்தி மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை என்பதே சாதனைதான். அதிலும் சாத்தியமான உச்சபட்ச சாதனைகளோடு நீண்டகால சேவை என்பது “இனிமேல் ஒருத்தன் பிறந்துதான் வரணும்” என்கிற வார்த்தைக்கு மிகப் பாந்தமாக பொருந்துகிறது.
இதனால்தான் சச்சின் தான் வாழும் காலத்தின் அடையாளமாக வரலாற்றில் அறியப்படப் போகிறார். கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் பாக்கியம் அது. கலைஞர்-எம்.ஜி.ஆர், ரஜினி-கமல், இளையராஜா-ரகுமான் என்று அவரவர் காலக்கட்டத்தின் அடையாளங்களாக மாறிப்போனவர்களுக்கு சமமான இன்னொரு எதிர்போட்டியாளரும் சமகாலத்தில் இருந்திருப்பார். சச்சினுக்கு நிகராக மட்டுமல்ல, அவரை நெருங்கக்கூடியவர்களும் கூட அவர் காலத்தில் இல்லை. அவ்வாறு சச்சினுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டவர்களும் கூட கடைசியில் சச்சினுக்கு சரணகோஷம் போட்டுவிட்டு ஓய்வெடுத்ததுதான் வரலாறு.
‘கிரிக்கெட் ஒரு மதமென்றால், சச்சின்தான் அதன் கடவுள்’ என்கிற வாக்கியம் சும்மா போகிறபோக்கில் சொல்லப்பட்டதல்ல. சச்சின் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்ப்பது இந்தியர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம்தான். ஏனெனில் இங்கே ஒரு தலைமுறைக்கு சச்சின் என்றால் கிரிக்கெட், கிரிக்கெட் என்றால் சச்சின். “கவாஸ்கரும், ஸ்ரீகாந்தும் ஓபனிங் இறங்குறப்போ...” என்று பழம்பெருமை பேசும் பெருசுகளும் அவரை ரசித்தார்கள். சைக்கிள் ட்யூப் பால், தென்னை மட்டை பேட்டோடு தெருவில் கிரிக்கெட் ஆட இறங்கிய வாண்டுகளும் அவரை ரசித்தார்கள்.
அவரது கேரியரின் கடைசிக்கட்டங்களில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் எக்காலத்திலுமே மோசமாக விளையாடியவர் அல்ல என்பதே நிம்மதியாக இருக்கிறது.
குட்பை சச்சின்!
- நன்றி: யுவ கிருஷ்ணா.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment