Thursday, 31 January 2013

ஆதார் அடையாள அட்டை

அகரம் சிவகுமார் திருமண வரவேற்பை முடித்துக் கொண்டு, அய்யம்பேட்டை வந்த மறுநாள், ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் எடுப்பதாய் சொல்லவே குடியரசு தினமான அன்று வெகு நாட்களுக்குப் பிறகு பள்ளி சென்று பார்த்தேன்.

தேசியக் கொடியேற்றி முடித்து மேடையில் பேசிக் கொண்டிருந்தனர் ஆன்றோர் பெருமக்கள். வெளியே காத்திருந்து சில நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பசுமையான நினைவுகள் குடியரசு மற்றும் பள்ளிக்கு சுதந்திர தின நிகழ்சிகளுக்கு செல்வது. 8 ஆம் வகுப்பு வரை நான் தான் கொடிக்கு முன் நின்று உறுதி மொழி சொல்ல அனைவரும் வழி மொழிவர்.

ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எங்கள் வார்டுகளுக்கு சங்கீத மஹாலில் எடுக்கவிருப்பதாகவும், அதற்கான உபகரணங்களை தயார் செய்வதாகவும் அறிந்து அங்கு செல்ல முற்பட்டேன். 

இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு (UIDAI) இந்த பணிகளை மேற்க் கொள்கிறது. இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கீழ்கண்ட தகவல்கள் அளிக்க வேண்டியிருக்கும்.

1. மார்பளவு புகைப்படம்.
2. கண்களின் ஐரிஸ்.
3. அனைத்து விரல்களின் ரேகைகள்.
4. உங்களது அடிப்படை தகவல்கள். 

கணினி மூலம், அவர்களின் உயிரியளவுகளை பதிவு செய்து கொண்டு, பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள எண் கொண்ட அட்டை ஒன்று வழங்கப்படும். 
Read More

Monday, 28 January 2013

சிவகுமார் திருமண வரவேற்பு பயணம் - 1

அகரம் நண்பர் சிவகுமார் அவர்களின் திருமண வரவேற்ப்பில் கலந்து கொள்வதற்காக வழக்கம் போல நீண்ட யோசனைக்குப் பிறகு வெள்ளிக் கிழமை (25-ஜன-2013) அரை நாள் விடுப்பெடுத்துக் கொண்டு சீர்காழி நோக்கிப் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணமானேன்.

மதிய நேர பயணம் செய்து நீண்ட நாட்கள் ஆகின்றது, எப்படி நேரத்தை பயனுள்ளதாக செலவழிப்பது என எண்ணி ஆனந்த விகடனும், புத்தக காட்சியில் வாங்கிய "தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் - எ. கே. செட்டியார்" புத்தகமும் எடுத்துச் சென்றேன். மத்திய கைலாசத்தில் பாண்டிச்சேரி பேருந்து கிடைக்கவே அங்கிருந்து பயனத்தை ஆரம்பித்தேன். நல்ல ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து மதிய நேர கடற்கரைச் சாலையை ரசிக்க முடிந்தது. பாண்டிச்சேரி எனக்கு மிகவும் பிடித்த ஊர். என்ன நேர்த்தியான சாலைகள் மற்றும் நகர அமைப்பு!!! வழி முழுக்க எங்கெங்கு சாலை ஓரங்கள் போரடிக்கிறதோ அப்போது விகடன் படிக்கலானேன். விகடனில் இப்போது செய்திகள் முன்பு போல தரமாக எல்லை என்பது எனது எண்ணம்.

பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சீர்காழிக்கு உடனடியாக பேருந்து கிடைக்கவே, நேரத்தை வீணடிக்காமல் அதில் அமர்ந்து பயணமானேன். கடலூர் வரும் வரை தமிழ்நாடு பயணக் கட்டுரைகளை வாசித்துக் கொண்டே வந்தேன். என்னே ஒரு சுகம் பழைய பயணக் கட்டுரைகளை வாசிக்கும் போது !!! என்ன ஊர் கட்டுரையை வாசிக்கிறோமோ அந்த ஊரிலேயே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பயணித்த ஒரு நினைவு.

சிதம்பரத்தில், நடராஜர் கோவிலில் முன்பு பேருந்திலிருந்தவாறு கும்பிடு போட்டுக் கொண்டு சீர்காழி நெருங்கியது பேருந்து. பேருந்தில் விசாரித்த போது திருமண மண்டபம் உள்ள விளந்திட  சமுத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதனால் கொள்ளிட முக்கூட்டு என்ற இடத்திலிருந்து 1 கி. மீ நடக்க வேண்டுமென்றார்கள். மண்டபத்தை அடைந்து சிவகுமாருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு சொந்த ஊரான அய்யம்பேட்டை பயணமானேன். (இரவு உணவை மண்டபத்திலேயே முடித்துவிட்டுத்தான்) :-) (சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...)

Read More

Tuesday, 22 January 2013

புத்தகக் காட்சி - 2013 ல் நான் வாங்கிய புக் லிஸ்ட்

புத்தகக் காட்சி - 2013 ல் நான் வாங்கிய புக் லிஸ்ட் கீழே,

பெயர் - நூல் ஆசிரியர் - பதிப்பகம்; என்ற வரிசையில் படிக்கவும்.

1. மூன்று விரல் - இரா. முருகன் - கிழக்கு
2. தமிழ் நாடு பயணக் கட்டுரைகள் - AK செட்டியார் - சந்தியா 
3. ஊர் சுற்றி புராணம் - ராகுல் - நியூ செஞ்சுரி
4. சென்னைக்கு வந்தேன் - அதியமான் - காலச்சுவடு
5. எப்படி ஜெயித்தார்கள் - ரமணன் - புதிய தலைமுறை
6. 18 வது அட்சக் கொடு - அசோகமித்திரன் - காலச்சுவடு
7. பாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்க் - கிழக்கு
8. நாளைய இந்தியா - அதனு தே - கிழக்கு
9. நடந்தாய் வாழி காவேரி - தி. ஜா - காலச்சுவடு
10. என் இனிய இயந்திரா - சுஜாதா - கிழக்கு
11. இன்றே இங்கே இப்போதே - - கிழக்கு
12. காற்றின் கையழுத்து - - விகடன்
13. ஆலிஸின் அற்புத உலகம் - லூயி கரோல் - விஜயா
14. திருப்பு முனைகள் - ஆ. ப. ஜே. அப்துல் கலாம் - கண்ணதாசன்
15. நகர்வலம் - ஞாநி - ஞானபானு



Read More

புத்தக காட்சி - 2013


ஜனவரி மாதம், பொங்கலுக்குப் பிறகு எதிர்பார்க்கும் மற்றொரு நிகழ்வு புத்தகக் காட்சி. வலைப் பூ எழுத ஆரம்பித்து பல வருடங்கள் :-) ஆனாலும் புத்தகக் காட்சி பற்றி எழுதும் முதல் பதிவு. இம்முறை எ. ஆர். ரஹ்மானுக்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும். 29-Dec-2012  நிகழ்ச்சி என்பதாலேயே புத்தகக் காட்சி சுமார் ஒரு வாரம் தள்ளிப் போனதாகவும், செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் சென்னை மெட்ரோ ரயில் வேலைகளாலும் YMCA மைதானத்துக்கு இடம் மாறியதாகவும் பரவலாக தகவல்.

எது எப்படியோ, இந்த முறை புத்தகக் காட்சி மைதானம் பிரம்மாண்டமான இடத்தில் நடந்தது. சென்னையின் மிக முக்கியமான இடமான அண்ணா சாலையில் இவ்வளவு பெரிய கல்லூரி மைதானமா என வந்திருந்த அனைவருமே ஆச்சர்யப்பட்டனர். நுழைவாயிலில் இருந்து சுமார் 1 KM நடந்து செல்ல வேண்டிய நிலை. (Parking காட்சி அரங்கத்தின் அருகில் அமைத்திருந்தால் வயதானவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்).

மொத்தம் 587 அரங்குகள், 14 பாதைகள். அனைத்து பாதைகளுக்கும் வழக்கம் போல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பெயர்கள். இம்முறை பாதைகள் மற்றும் ஸ்டால்கள் மிகவும் குறுகலாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் வாசகர்களின் வருகை மிக அதிகம். அனைத்து ஸ்டால்களுக்கும் சென்று வர கண்டிப்பாக 1 நாள் தேவைப்படும்.

கிழக்கு, ஆனந்த விகடன், Higginbothams அரங்குகளில் நல்ல வாசகர் எண்ணிக்கை. இம்முறையும், CD, DVD விற்பனை அரங்குகள் அதிகம் காணப்பட்டன. புதிய முயற்சியாக, கிழக்கு பதிப்பகத்தின் மின் புத்தகங்கள், அதற்கான தேவை மற்றும் எதிர்காலங்கள் பற்றிய அரங்கமும், பாதை நிறுவனத்தாரின் Audio புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களும் கிடைத்தன,

எஸ். ராமகிருஷ்ணன், ஞானி, பழ நெடுமாறன், மனுஷ்யபுத்திரன், பவா செல்லத்துரை, சைலஜா உள்ளிட்ட எழுத்தாளர்களையும், கரு. பழனியப்பன், வசந்த பாலன் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்களையும் சந்திக்கும், உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

15 புத்தகங்கள் வாங்கியுள்ளேன். இப் புத்தகங்கள் அனைத்தும் சென்ற 1 ஆண்டாக அதன் மதிப்புரைகளை படித்து குறித்து வைத்தது.(இன்னொரு தனிப் பதிவில் பட்டியலிடுகிறேன்). கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும், அத்தனை புத்தகங்களையும் பத்திரமாக எடுத்து செல்ல  பெரிய பை கொடுத்தனர். (இம்முறை, Plastic பைகளுக்குத் தடை)

புத்தக காட்சி முடிந்து வெளியில் வந்த போது பையும், மனமும் நிறைந்திருந்தது. கால் வலியுடன்... (வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்... :-))


Read More

Sunday, 20 January 2013

படித்ததில் பிடித்தது ...

மன அழுத்தத்தை குறைக்க, கீழ் காணும் 10 வழி முறைகளை பின்பற்றலாமே .


1. கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.

எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

2. ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.

எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.

3. உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.

இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

4. உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.

5. தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.

புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.

6. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

7. ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.

உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.

8. பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.

நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

9. சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள்.

சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.

10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.

பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.
Read More

Saturday, 5 January 2013

பிச்சைப் பாத்திரம்.... - நான் கடவுள் (பிடித்த பாடல்)


பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே - என் ஐயனே - யாமொரு
பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே - என் ஐயனே
பிண்டம் எனும்
எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் - பிச்சைப் பாத்திரம்..

அம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை
ஆதியின் ஊழ்வினை வந்ததால்
இம்மையை நானறியாததால் - இந்த
பொம்மையின் நிலையெனில்
உண்மையை உணர்ந்திட - பிச்சைப் பாத்திரம்..

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் - நான்
பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் - அதன்
சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒருமுறையா இல்லை இருமுறையா
பல முறை பலப்பிறபெடுக்க வைத்தாய்
புது வினையா ? பழ வினையா ?
கனம் கனம் தினம் எனை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துறத்துதே
அருள் அருள் அருள் என்று
அலைந்திடும் மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய் - உன்
திருக்கரம் எனை அரவனைத்துனதருள் பெற – 
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்..

---- மற்றுமொரு இனிமையான பாடல், இளையராஜா வின் இசையில்.
Read More

நலம் வாழ.... - மறுபடியும் (பிடித்த பாடல்)


நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..! (நலம் வாழ...)

கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்! (நலம் வாழ...)

----- ஒரு அருமையான பாடல்.
Read More

Thursday, 3 January 2013

2013 - புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் - 2

01-Jan-2013

காலை: புது வருட பிறப்பென்றால் மாம்பலம் பகுதியிலுள்ள விநாயகர் மற்றும் கருமாரி அம்மனை தரிசித்து விட்டு, தி.நகர் சிவா-விஷ்ணு ஆலயம் சென்று வழிபட்டபிறகு, எப்போதும் திருமலை - திருப்பதி தேவஸ்தானக் கோவிலுக்கும் செல்வது வழக்கம். இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல.

திருமலை - திருப்பதி தேவஸ்தானக் கோவிலில் தான் மிக நீண்ட வரிசை பொது தரிசனம் செய்வதற்காக. இம்முறை, Pass Entry என்று புதிய வரிசை வேறு.  இந்த Pass யாருக்கெல்லாம், எப்போது கொடுத்தார்கள் என்பதெல்லாம் திருமால் மட்டுமே அறிந்த உண்மை. போலீசாரின் கெடுபிடிகளுடன் வழக்கம் போல Pocket Calendar, Water Pocket க்கும் குறைவில்லை.

திருப்பதியில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட லட்டு விற்பனையும் அமோகம். வழக்கம் போல திவ்ய தரிசனம்.

மதியம்: Mayajaal - Multiplex திரையரங்கில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த நகைச்சுவைத் திரைப்படம் பார்த்த திருப்தி. (நன்றி: முருகானந்தம் - டிக்கெட் முன் பதிவிற்காக). இந்த கதை நிஜக் கதை வேறாம். Real Life ல் இந்த மாதிரி நடந்தால்..... நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. 

மாலை: Mayajaal ல் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக, Besant Nagar கடற்கரைக் காற்றை சில நேரம் சுவாசித்து விட்டு, மணலில் விளையடிவிட்டும் அமர்ந்தோம். Besant Nagar கடற்கரையில் உள்ள அந்த வெள்ளைக் காரரின் நினைவிடத்தை இன்னும் அரசு கண்டு கொள்ள வில்லையென்றால் அந்த சின்னமே சிதைந்து விடும்.

இரவு: Adayar பகுதியிலுள்ள "The Rock" என்றொரு Thematic Restaurant ல் இரவு உணவு. காட்டினுள் நுழைந்தது போலவும், ஆதிவாசிகளின் சிலைகள், சல சலவென கொட்டும் நீர் வீழ்ச்சி என ஒரு பிரம்மாண்டமான கலை  வடிவமைப்பு. இரவு உணவை முடித்துக் கொண்டு, தமிழினி இனிப்பகத்திலி ருந்து வாங்கி வந்த யாழ்பாணம் தொதல் என்றொரு வித்தியாசமான இனிப்பை உண்டும், கோவை பழமுதிர் நிலையத்தில் மாதுளை ஜூஸ்  பருகியும்  புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நிறைவு செய்தோம். 

மறக்க முடியாத ஒரு புத்தாண்டுத் தொடக்க நாள்.

நன்றி: முருகானந்தம், சரவணகுமார், மாரியப்பன், மணிகண்டன் மற்றும் வம்சி.
Read More

Wednesday, 2 January 2013

2013 - புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் - 1



இம்முறையும் வழக்கம்  போலவே, Shalom Mansion ல் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டின. நள்ளிரவு 12 மணி அடிக்கும் போது பக்கத்து அறை நண்பர்களின் வாழ்த்துக்களுடன், வாண வேடிக்கைகளுடன் இனிதே பிறந்தது இந்த நல்ல ஆண்டு.

Mansion மாடியில் இருந்து பார்த்தால் 360 டிகிரியிலும் சென்னை மாநகரம் வாண வேடிக்கைகளால் இரவை பகலாக்குவதைப் போல மின்னிய காட்சி காணக் கிடைக்காதது. Mansion வாசலில் நண்பர்களின் நடனங்கள், ஒரு அறை நண்பரின் பிறந்த நாள் கேக் ரோட்டில் வைத்து வெட்டியது, போகிற வருகிற கார் பைக்குகளை நிறுத்தி அவர்களுடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டது மனதுக்கு மிகவும் மகிழ்வளித்தது. 

இந்த ஆண்டும் வழக்கம் போல "சகல கலா வல்லவன்" திரைப் படத்தில் வரும் "Hai Everybody Wish You Happy New Year" என்ற பாடலோடும் தான் தொடங்கியது. தமிழ் திரைப்படப் பாடலாசிரியர்கள் இந்தப் பாடலைப் போல இந்த ஆண்டாவது இன்னொரு பாடலை இயற்றுவார்களா?

நன்றி: மணி கண்டன், வீர மணிகண்டன், சிவக் குமார் மற்றும் வெங்கட்   (இந்த புது வருடத்தை மறக்க முடியாமல் செய்ததற்கு)
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena