Wednesday, 12 November 2014

சிஸ்துபலேக்கா

பயணங்கள் என்றுமே சலிப்பு தட்டாதவை. புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய விஷயங்கள் என எல்லாமே புதியதாக அமைவதனால் என்னவோ!! அவ்வாறான இனிமையான பயணங்களில் மழலைகளுடன் உரையாடுவது அலாதியான ஒன்று. 

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கூட்டமாக இருந்ததனால் ஒரு 5 வயது சிறுமியை இருக்கையில்  அமர்ந்திருந்த என்னுடைய பொறுப்பில் விட்டுவிட்டு   பெற்றோர்கள் நெரிசலில் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறுமியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். முதல் கேள்வியாக எப்போதும் போல் "உன்னுடைய பேர் என்ன?" என தொடங்கினேன். சற்றே தயக்கத்திற்குப் பிறகு "சிஸ்துபலேக்கா" என்று பதில் வந்தது. ஒன்றும் விளங்கவில்லை அந்த பதிலில். மீண்டும் அதே கேள்வியை கேட்க, பதிலிலும் எந்த மாறுதலும் இல்லை. நமக்கு மறுபடியும் புரியாமலே இருந்தது. 

புரிந்துகொண்டதுபோல் சமாளித்துக் கொண்டு  "எந்த வகுப்பில் படிக்கிறாய்?" என அடுத்த கேள்வியை கேட்க, முதலாம் வகுப்பு என்று முதல்முறையாக சரியான பதில் சொன்னாள். இருந்தாலும் மனதினில் அந்த பெயர் புரியாத நிலை வேறு குத்திக் கொண்டிருந்தது. மனதிற்குள் பலவேறு வகையான கேள்விகள் அந்த பெயரை கண்டு பிடிப்பதற்கு...

சிறுமியின் நெற்றியை பார்த்தேன், Christian ஆக இருப்பர்களோ என்று. ம்ஹூம், இல்லை. நெற்றியில் பட்டையாக விபூதி. கோவிலில் இருந்து நேரடியாக வந்ததுபோல். முகம்மது கஜினியைப் போல் மீண்டும் முயற்சிக்க இம்முறையும் அதே "சிஸ்துபலேக்கா" என்ற பதில் தான். மனதுக்குள் ஒரு பெயரைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்ற இயலாமை வேறு. இருந்தாலும் மழலை மொழி அவ்வளவு எளிதல்ல புரிந்துகொள்ள. எப்படியிருந்தாலும் சிறுமியை அவளது பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் போது பெயர் பெயர் கேட்டுவிட வேண்டும் என்றும் மனம் எண்ணியது. 

மீண்டும் அதே கேள்வி மற்றும் அதே பதில். இம்முறை 2ஆவது கேள்வி வித்தியாசமாக "உங்க வீட்டில் உன்னை எப்படி கூப்பிடுவாங்க?" என்று. "துபலேக்கா" என்று பதில் வந்தது . சுதாரித்துக் கொண்டு "சுபலேகா" வா என்றேன். ஆமாம் என்று பெரியதாய் தலையாட்டினாள் அவள். அப்பாடா... பேரு மூச்சு, அவளது பெயர் "ஸ்ரீ சுபலேகா". அறிவியல் விஞ்ஞானிகள் யுரேக்கா என்று கர்ஜிப்பது போல் தோன்றியது மனம். 

இந்த பெயர் கண்டு பிடிப்புக்கு இடையே பல விஷயங்கள் மனதுக்குள் ஓடின.

  • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் Daddy, Mummy என்று அழைப்பதையே விரும்புகிறார்கள்.
  • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ABCD ஒழுங்காக சொல்கிறார்களா என்றே எண்ணுகின்றனர்.
  • தமிழ் படிப்பது/ பேசுவது தவறு என்றே எண்ணுகின்றனர்.


அவர்கள் தத்தம் பெயர்களை ஒழுங்காக உச்சரிக்க வேண்டும். பிறர் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் அதற்கான பயிற்சியில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும்.

சமீபத்தில் ஒரு சமூக வலைத்தளத்தில் படித்த செய்தியை மேற்கூறிய சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க தோன்றியது.

பெங்களூரில் ஒரு பள்ளிச் சிறுமியை ஒருவன் கடத்த முயல்கிறான், அந்த சிறுமியிடம் அவரது தாயார் வீட்டுக்கு அழைத்து வர சொன்னதாக சொல்ல, அவனிடம் Password என்ன என்று கேட்டிருக்கிறாள் அவள். திருடன் முழிக்க ஆரம்பித்திருக்கிறான். புத்திசாலியான சிறுமி மற்றும் அவளது தாயார்  அந்த நேரத்தில் சமயோசிதமாக எவ்வாறு நடந்துகொள்வது என்று பயிற்சி கொடுத்திருக்கிறார். பாராட்டப்படவேண்டிய ஒன்று.

தமிழ் படிப்போம்/ பேசுவோம்/ கற்றுக்கொடுப்போம்/ உச்சரிப்போம் தெளிவாக.
Read More

Tuesday, 11 November 2014

இடைவெளி....... திருமணம்...... தொடக்கம்

இடைவெளி
.
.
.
.
.
ஜனவரி மாதத்திற்கு பிறகு பணிச்சுமை மற்றும் பலவேறு காரணங்களினால் தள்ளிப் போன வலை பதிவினை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி.
.
.
.
.
.
திருமணம் 
.
.
.
.
.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் ஆசியுடன்
2014 செப்டம்பர் மாதம் திருமணம் இனிதே நடைபெற்றது.
.
.
.
.
.
தொடக்கம்
.
.
.
மீண்டும் இந்த வலைப் பூவின் மூலம் கருத்துக்களை பகிர விழைகிறேன்.
Read More

Tuesday, 28 January 2014

புத்தக காட்சி - 2014

சென்னை புத்தக காட்சி - 2014, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திருவிழா.
சென்ற ஆண்டு முழுவதும், என்னுடைய வாசிப்பிற்கான ரசனைக்கு ஒத்துப் போகும் புத்தக மதிப்புரைகளைப் பட்டியலிட்டு வந்துள்ளேன்.

அந்த பட்டியலுக்கு செயல் வடிவம் கொடுக்க YMCA மைதானத்தில் நடந்த சென்னை புத்தக காட்சி - 2014 க்கு சென்று வந்தேன்.

இம்முறை வாகன நிறுத்தும் இடத்திலிருந்து புத்தக காட்சி நடக்கும் YMCA கல்லூரி மெயின் கேட் வரை வேன் - ல் அழைத்துச் சென்றார்கள். 770 ஸ்டால்கள் கொண்ட பிரம்மாண்டமான இடம். வழக்கம் போல தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயரில் நடை பாதைகள். குறுகலாக இல்லாமல் விஸ்தாரமாக தெரிந்தது.

வழக்கம் போல இம்முறையும் குழந்தைகளுக்கான CD, DVD ஸ்டால்கள், ஜூஸ் கடைகள் மற்றும் வித்தியாசமாக நித்தியானந்தர் மற்றும் சில சாமியார்களின் அரங்ககுகளும் இடம் பெற்றிருந்தன.

மனுஷ்ய புத்திரன், ஞாநி, சாரு நிவேதிதா, அராத்து மற்றும் சில சின்ன/பெரிய திரை நடிகர்களையும் மற்றும் பல வலைப் பூ எழுத்தாளர்களையும் சந்திக்க முடிந்தது.

வாங்கிய புத்தகங்கள்:

பெயர் - ஆசிரியர் - பதிப்பகம்; என்ற வரிசையில்.

1. சின்ன வயதினிலே - மெரினா - விகடன்
2. ஆறாவடு - சயந்தன் - தமிழினி
3. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - மீனாக்ஷி
4. பெர்லின் இரவுகள் - கோ. கருணாமூர்த்தி - உயிர்மை
5. அன்சைஸ் - பா. ராகவன் - மதி நிலையம்
6. ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ண நிலவன் - நர்மதா
7. அடுத்த கட்டம் - என். சொக்கன் - மதி நிலையம்
8. பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன் - காலச்சுவடு
9. ஆதி மங்கலத்து விசேஷங்கள் - சு. கி. சிவகுமார் - விகடன்
10. எரியும் பனிக் காடு - இரா. முருகவேல் - விடியல்
11. ஒரு இந்திய கிராமத்தின் கதை - சரவணன் - சந்தியா
12. அடுத்த வீடு 50 மைல் - தி. ஜானகிராமன் - ஐந்திணை
13. எஸ்கேப் - சுரேகா - மதி நிலையம்
14. வட்டியும் முதலும் - ராஜு முருகன் - விகடன்
15. நம். 40 ரெட்டை தெரு - இரா. முருகன் - கிழக்கு
16. லிண்ட்சே லோகன் W/O  மாரியப்பன் - வா. மணிகண்டன் - யாவரும்.காம் 
17. ராஜீவ் காந்தி சாலை - விநாயக முருகன் - உயிர்மை
18. ஆஸ்டின் இல்லம் - சுஜாதா - கிழக்கு
19. ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - எஸ். ராமக்ருஷ்ணன்
20. மங்கள இசை மன்னர்கள் - மணியன் - மணிவாசகர்
Read More

Thursday, 23 January 2014

தமிழ் இனி மெல்ல சாகும்? - யார் சொன்னது?!


அதிஷா அவர்களின் வலைப்பூவில், சீனப் பெண் ஒருவர் சன் தொலைக்காட்சியில், சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் தமிழில் சரளமாக உரையாடி இருக்கிறார் என்று கூறியிருந்தார். மேலும் அதற்கான காணொளி இணைப்பையும் அளித்திருந்தார்.

அந்த காணொளியை மிகவும் ஆர்வத்துடன் பார்க்க நேர்ந்தது. சீன வானொலி தமிழ் பிரிவு இயக்குனர், கலைமகள் என்பவரின் பேட்டி அது. கலைமகள் என்ற பெயர் அவரின் தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாக அவரின் ஆசிரியர் சூட்டியதாக கூறினார். அவரால் முடிந்த வரையில் ஆங்கில கலப்படமின்றி அவரால் தமிழில் உரையாட முடிந்தது. அவ்வளவு அட்சர சுத்தமாக தமிழில் உரையாடினார். 

சீன மொழி மட்டுமல்லாது, வேற்று நாட்டு மொழி ஒன்றை படிக்க ஆர்வப்பட்டு, இந்திய மொழிகளில் தமிழை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தமிழ் கலாசாரம், கோவில்கள்  மற்றும் பண்பாடு என்று குறிப்பிட்டார். மேலும் அவர், 2013 ஆண்டை  ஈராயிரத்து பதிமூன்று என்று உச்சரித்தது மிகவும் ஆச்சரியம். 

இந்தியாவில் முதலில் பார்த்த நகரம் சென்னை என்றும் தமிழ் உணவுகளில் இட்லி, மசாலா தோசை ஆகியவை பிடித்திருக்கிறதாகவும் கூறினார்.

மேலும், சீனாவில் இன்ப உலா என்ற சீன பயண அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும், சீன - தமிழ் அகராதி தயார் செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தமிழர்களாக இருந்தும், அவர்களால் சாதாரண தமிழில் கேள்விகளை கேட்க முடியவில்லை. சாதாரணமாக உரையாடினால் எங்கு ஆங்கிலம் கலந்து விடுமோ என்ற அச்சத்தால் செந்தமிழில் தான் பேசினர். மேலும், கலைமகள் திருக்குறள் (நன்றி மறப்பது நன்றன்று... என்ற), தமிழ் பாடல் பாடியதும் மிகுந்த ஆச்சர்யமே.

அந்த காணொளிக்கான சுட்டி: http://www.youtube.com/watch?v=DoZp0AZ94ME 



Read More

Thursday, 2 January 2014

2014 - புத்தாண்டு கொண்டாட்டங்கள்


Happy New Year - 2014

புத்தாண்டு தொடக்கம் Shalom Mansion ல் நண்பர்களுடன் வழக்கம் போல் கொண்டாடி முடித்தாயிற்று. இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏனோ களை கட்டவில்லை என்றே தோன்றுகிறது.

01-01-2014: மிகச் சமீபத்தில் திருமலைக்கு சென்று பெருமாளை தரிசித்தபடியால் இம்முறை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  புத்தாண்டு தரிசனம். வடபழநி முருகனையும் தரிசித்துவிடவேண்டும் என்று மனது அடித்துக் கொண்டமையால் வடபழநி ஆண்டவரை சேவிக்க கோவில் வரை சென்றாகிவிட்டது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம். Rs. 100, Rs. 50 மற்றும் தர்ம தரிசனம் என வகைபடுத்தியும் மிக அதிகமான கூட்டம். Q வில் நின்றால் 3 மணி நேரமாவது ஆகும் எனப் பட்டதால், வடபழனி ஆண்டவரை கோபுர தரிசனம் செய்து விட்டு நடையை கட்டினேன்.

நேரே மாயாஜால் பயணம். (அது என்ன மாயமோ தெரியவில்லை, ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் மாயாஜாலில் மட்டுமே டிக்கெட் கிடைக்கின்றது!!!). கிழக்கு கடற்கரை சாலையில் போகிற வழி எங்கும் புகழ் பெற்ற கோவில்கள் (சாய் பாபா, ISKCON, பூரி ஜெகந்நாதர் etc.), உணவகங்கள் அதிகம் இருப்பதாலும் விடுமுறை தினத்தன்று இந்த சாலை அதிகபட்ச மக்களால் பயன் படுத்தப்படுவதால் எங்கு காணினும் போக்குவரத்து நெரிசல். 

நண்பர்களுடன் மாயாஜாலில் ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா மற்றும் பலர் நடித்த "என்றென்றும் புன்னகை" திரைப்படம் பார்த்தேன். (மேற்கூறிய காரணத்தால் அரை மணி நேரம்  தாமதமாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன்). ஒரு வித்தியாசமான கதைக்களம். திருமணமே செய்ய மறுக்கும் இளைஞர்கள், சூழ்நிலைகளினால் மாறி திருமணம் செய்து கொள்ளும் கதை.

திரைப்படம் முடிந்தபின், சோழிங்க நல்லூரில் இல்ல ISKCON கோவில் சென்று ராதா கிருஷ்ணரை வழிபட்டோம். கோவிலின் அமைப்பு  மிக நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.  ISKCON கோவில் கட்டுமானம் பிற ISKCON கோவிலைப் போலவே இருக்கின்றது. முன்பொருமுறை பெங்களூரு ISKCON கோவில் சென்று வந்திருக்கிறேன்.

மாலை மீண்டும், ECR ல் பயணித்து வேட்டுவான்கேணி பகுதியில் உள்ள "BASERA" என்ற சிறப்புக் கூறு உணவகத்தில் உணவருந்தினோம். BASERA உணவகம் ஒரு Garden Theme ல் உருவாக்கப்பட்டுள்ளது. இருட்டான அந்த Garden அமைப்பில், மேஜையில் மெழுகுவர்த்தி வெளிச்சம் தான். (ஆங்கிலத்தில், Candle Light Dinner என்கிறார்கள்).

மொத்தத்தில், வழக்கம் போல ஒரு புத்தாண்டு தினத்தை மகிழ்வுடன் கொண்டாடிய நிறைவுடன் கலைந்தோம்.
Read More

Saturday, 28 December 2013

திருமலை தரிசனம்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏழுமலையானை திருமலைக்கே சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது !!! (பலமுறை சென்னை வேங்கட நாராயணா ரோட்டில் தரிசித்தமையால்...)

இரண்டாவது முறையாக தி.நகர்  பர்கிட் ரோட்டில் அமைந்துள்ள ஆந்திர மாநில சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து காலை 5 மணிக்கு சரியான நேரத்தில் புறப்பட்டாயிற்று.  திருத்தணி, புத்தூர் வழியாக திருப்பதி. வழியில் புத்தூரில் ஆந்திர மாநில சுற்றுலா உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு திருப்பதி நோக்கி பயணமானோம். 

திருப்பதி RTC பேருந்து நிலையத்தில் திருமலைக்கு செல்லும் அரசுப் பேருந்திற்கு மாற்றலாகி திருமலைக்கு புறப்பட்டோம். ஒவ்வொரு முறை திருமலைக்கு பயணப்படும் போதும் கண்டிப்பாக ஏதாவது ஒரு மாற்றத்தை காண முடியும். இம்முறை திருமலைக்கு சென்ற அரசுப் பேருந்தில்  "ஓம் நமோ வேங்கடேசாய.." மந்திரம் ஒலித்துக்குக் கொண்டே இருந்தது. இந்த மந்திர உச்சரிப்பு நம்மை திருமலைக்கு செல்லும் வழியெங்கும் மனதை  ஆன்மீகத்தில் ஒருங்கிணைப்படுத்தியது. மேலும், மலைச் சாலை தொடங்கியதுமே ஒவ்வொருவரும் சோதனைக்குட்படுத்தியபிறகே பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

திருமலை ராம் பக்கீஜா பேருந்து  நிலையத்தில் இறக்கி விடப்பட்டோம். தலை மொட்டை அடித்துக் கொள்ள சென்றவர்கள் திரும்பும் வரை அங்கேயே காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு கை பேசி, செருப்புகள் மற்றும் நம்மிடம் உள்ள அனைத்து வகையான மின்னணு சாதனங்களை அங்கு ஒரு கடையில் டோக்கன் போட்டு வைத்து விட்டோம். இனி தரிசனம் முடிந்த பிறகுதான் இதனை திரும்ப எடுக்க முடியும்.

திருமலையில் எதாவது ஒரு கட்டிட, சாலை மற்றும் மராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. கோவிலின் முன்புறம் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கு முன்  திருமலை வந்த பொது கோவிலின் முன்னே சூடம் ஏற்றும் இடத்தில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை இருபுறமும் கடைகள் இருக்கும். இம்முறை ஆஞ்சநேயர் கோவில் வரை தரை தான். மிகவும் விஸ்தாரமாக காட்சி அளிக்கின்றது.

கோவிலுக்கு இடது புறம் உள்ள வைகுண்டம் Q காம்ப்ளெக்ஸ் க்கு சென்று சுற்றுலா அதிகாரி Rs. 300/- அனுமதி சீட்டு வாங்கி வரும் வரை காத்திருந்தோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சரியாக மணி 12 அளவில் Q காம்ப்ளெக்ஸ் ன் உள்ளே அனுமதிக்கப் பட்டோம். வழக்கம் போல அறைகளில் மக்கள் கூட்டம். நாங்கள் 25 ஆம் எண் அறையிலிருந்து வெளியேறி Q காம்ப்ளெக்ஸ் முழுவதும் நடந்து (ஊர்ந்து!) சென்று மீண்டும் கோவிலின் இடது புற வழியாக திரும்பி முன்புறமான மஹா  துவாரம் என்றழைக்கப்படும் பிரதான வாயிலில் நுழைந்தோம்.

கோவிலினுள் அனைத்து மண்டபங்களும் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன. கொடிமரம் தாண்டி மீண்டும் ஒரு சிறு கோபுரம் வழியாக மூலஸ்தானம் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தோம். அதுவரை பொறுமையாக வந்த மக்கள் அதற்குப் பிறகு தள்ளு முள்ளுதான். கிட்ட தட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு ஏழுமலையானை சுமார் 1 நிமிடம் தரிசித்துவிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு கோவிலின் உள்ளே இருந்து வெளியேறினோம்.

சுற்றுலா அதிகாரி கூறியது போல கோவிலின் எதிரே உள்ள புத்தக நிலையத்தில் அனைவரின் வருகைக்காக காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு அவரவர் லட்டு பிரசாதங்களை பெற்றுக் கொண்டு மீண்டும் ராம் பக்கீஜா பேருந்து நிலையத்திற்கு திரும்பி உடமைகளை பெற்றுக் கொண்டு திருப்பதி நோக்கி பயணமானோம்.

திருப்பதி வந்தவுடன் மதிய உணவு எடுத்துக் கொள்ள திட்டம். மணி 4.45. எங்களுடைய அடுத்தப் பயணத்திட்டத்தில் திருச்சானூர் அலமேலுமங்கை கோவில். இந்த கோவிலில் மாலை 5.30 மணியிலிருந்து 07.00 மணி வரை தரிசனம் நிறுத்தப்படுகிறது. இந்த காரணத்தை கொண்டு மதிய உணவை புறந்தள்ளி விட்டு Rs. 100/- பெறுமான அனுமதி சீட்டு வாங்கி 05.30 மணிக்கு முன்னதாகவே தரிசனம் முடித்தாயிற்று. திருச்சானூர் கோவிலில் Rs. 100/- அனுமதி சீட்டிற்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சென்னை திரும்பும் வழியில் திருத்தணியில் எங்களுடைய மதிய(மாலை) உணவை அருந்தினோம். ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்  மற்றும் ஹிந்தி  (தெரிந்த வரை!) மொழிகளில் பலரிடம் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. 

திருமலை-திருப்பதி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் திருத்தணி, திருவள்ளூர், போரூர் வழியாக சென்னை வந்தடைந்தோம்.


Read More

Saturday, 7 December 2013

கோவை - ஈஷா - மருதமலை - உதகை - முதுமலை பயணம் - 2


 கோவைப் பயணத்தை முடித்துக் கொண்டு,  மாருதி ஓம்னி வண்டியில் எங்களுடைய உதகை பயணத்தை தொடங்கினோம். வழியில் மேட்டுப் பாளையத்தில் நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, காலை உணவருந்தியபின் மலைப் பாதையில் குன்னூர் வழியாகப் பயணமானோம். வழியெங்கும் மலைகளின் அரசி பூமியில் பச்சைப் பட்டுடுத்தி, சற்றே மழையுடன் வரவேற்றாள். 

சரியாக 12 மணியளவில் நாங்கள் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த Hotel Astoria Residency - க்கு வந்து சேர்ந்தோம். Hotel நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அழகான அமைப்புடன் இருந்தது. ஒரு அரை மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துவிட்டு  அடுத்தக் கட்ட உள்ளூர் பயணத்திற்கு தயாரானோம். Hotel - அறையினில் இருந்து உதகை ரம்மியமாக காட்சி அளித்தது. வெளியே மழை தூறிக்கொண்டே இருந்தது.


Hotel அறையிலிருந்து வெளியில் வந்தவுடன் புதிய சீதோஷன நிலை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மழை மற்றும் குளிருக்கு இதமான ஆடைகளையே அணிந்திருந்தோம் இருந்தாலும் நவம்பர் மாதக் குளிரைத் தாங்கும் வகையில் குளிருக்கேற்ற அணிகலன்களை வாங்கி அணிந்துகொண்டோம்.

இருசக்கர வாகனத்தை வாடகை அமர்த்திக் கொண்டு உள்ளூரில் உள்ள சில இடங்களை கண்டு களிக்கலாம் என்று திட்டம். அதேபோல் தலா  ஒரு Thunderbird, Pulser மற்றும் Dio வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கு ரூ. 100 முதல் ரூ. 150 வரை வாடகை வாகனங்களின் தகுதிக்கேற்ப வாங்குகிறார்கள். பெட்ரோல் செலவு தனி. நமது ஓட்டுனர் உரிமங்களை சரி செய்த பிறகே வாகனங்களை அளிக்கின்றனர். (ஏதாவது ஒரு அடையாள அட்டையை வாங்கி வைத்து கொள்கின்றனர் அத்தாட்சிக்காக)

அனைவரும் அவரவர் வண்டிகளில் உதகை நகர ஏரிக்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தோம், ஏரியில் படகுச் சவாரி செய்வதற்காக. மழை மீண்டும் குறுக்கிடவே ஏற்கனவே குளிரில் இருந்த நாங்கள் ஓரமாக நின்று மழை முழுவதுமாக நிற்கும் வரை காத்திருந்தோம். பனி மூடிய அந்த மாலைப் பொழுது மிகவும் இதமாக இருந்தது. மழை நின்ற பிறகு முதலில் மெழுகு அருங்காட்சியகம் சென்றோம். இந்த அருங்காட்சியகம் ஒரு தனியாரினுடையது. ரூ. 20 நுழைவுக் கட்டணம், தேசத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என பலவேறு வகைகளில் மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

மெழுகு அருங்காட்சியகத்திலிருந்து மீண்டும் உதகை ஏரி நோக்கி பயணித்தோம். மழை தூறிக் கொண்டிருக்கவே படகுச் சவாரி செய்ய முடியாது என்று ஏரியின் அழகை கண்டு ரசித்தோம். உதகை ஏரியில் மோட்டார் விசைப் படகு, துடுப்புப் படகு, கால் மிதிப் படகு என்று பல்வேறு வகைகளில் படகுச் சவாரி செய்யலாம். எரிக்கரையில் ஏராளமான கடைகள் மற்றும் அதற்க்கேற்ற வகையில் சுற்றுலாப் பயணிகள். அந்த இதமானக் குளிருக்கு இதமாக சூடான ஊட்டி மிளகாய் பஜ்ஜி வாங்கி சுவைத்தோம்.


மீண்டும் அவரவர் வண்டிகளில் உதகை நகரச் சாலைகளில் பயணித்து வண்டியை ஒப்படைத்துவிட்டு எங்களது அறையை நோக்கி நடக்கத் துவங்கினோம. மேலும், வீட்டுக்கு தேவையான தேயிலை மற்றும் யூக்கலிப்டஸ் தைலங்களையும் உதகை கூட்டுறவு அங்காடியில் வாங்கிக்கொண்டு அறையை சென்றடைந்தோம். இரவு உணவை முடித்து உறங்கலானோம் அடுத்தநாள் திட்டங்களை யோசித்துக்கொண்டே.

முதல் நாள் ஹோட்டல் மேலாளரிடமும், வெளியில் சில உள்ளூர் பயண ஏற்பாட்டாளர்களிடமும்  விசாரித்து உதகை உள்ளூர் இடங்கள், பைகாரா மற்றும் முதுமலை வனவிலங்கு சரணாலயம் செல்ல வண்டிக்கு முன் பதிவு செய்திருந்தோம். காலை சரியாக 9 மணிக்கு Hotel அறையை காலி செய்துவிட்டு முதல்நாள் ஏற்பாடு செய்திருந்து வண்டியில் பயணம் செய்ய தயாரானோம்.

மிக இதமான மழையுடன்தான் எங்களுடைய பயணத்தை துவக்கினோம். முதலில் சாக்லேட் அருங்காட்சியகம் சென்று பார்த்தோம். இதுவும் ஒரு தனியார் வசமான அருங்காட்சியகம் தான் (சாக்லேட் கடை). நுழைவுக் கட்டணம் ரூ. 20. நல்ல கலைப் பொருட்கள் சாக்லேட் மற்றும் வெள்ளை நிறத்திலான சாக்லேட் வகைகளில் செய்து வைத்திருந்தனர். முடிவில் சாக்லேட் துண்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் நமக்குத் தேவையான சாக்லேட் வகைகளை வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். நல்ல ஒரு Marketing technique என்று தோன்றியது.

பைகாரா செல்லும் வழியில், Pine Forest எனப்படும் ஊசியிலைக் காடுகளை பார்த்து ரசித்தோம்.பெரிய பெரிய மரங்கள் ஒரே இடைவெளியில் வளர்ந்துள்ளது போல இருந்தது. புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டோம். இந்த மரங்கள் வரிசையின் முடிவில் காமராஜர் சாகர் அணை உள்ளதாக வண்டி ஓட்டுனர் கூறினார். மேலும், பல திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்ட 9th Mile என்ற இடத்தில் சில மணித்துளிகள் செலவு செய்துவிட்டு பைகாரா நோக்கிப் புறப்பட்டோம்.


பைகாரா என்னும் இடத்தில் உருவாகும் பைகாரா ஆறு, அருவியாக விழுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக  நீர் மின்சாரம் இங்கு எடுக்கப்படுகிறது. உதகை-கூடலூர் சாலையில் பைகாரா ஆற்றின் குறுக்கே பைகாரா அணை ஒன்றும்  கட்டப்பட்டுள்ளது. மிகப் பழமையான மின் நிலையங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. சாலையிலிருந்தே பைகாரா அணை, மட்டும் அருவியைப்  பார்க்கலாம். ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. பைகாரா ஆற்றின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக படகுச் சவாரி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மழையின் காரணமாக அங்கேயும் படகுச் சவாரி செய்ய முடியாமல் ஆற்றின் அழகை ரசித்துவிட்டு திரும்பினோம். பைகாரா ஆறு இந்தியாவின் வரைபடம் போல தோற்றமளிக்கின்றது.


பைகாராவில் இருந்து  கூடலூர் வழியாக முதுமலை சென்றடைந்தோம். முதுமலை வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தின் எல்லையிலிருந்து தொடங்கி கர்நாடக மற்றும் கேரளா எல்லை வரை விரிகின்றது. 1940-ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு காப்பகம் இதுவேயாகும். முதுமலை காடுகள் அவ்வளவு அடர்த்தியாக இருக்கவில்லை. மேலும் இந்தக் காட்டுப்பகுதியில் யானை, மான்கள், சிறுத்தைகள், கரடிகள் காட்டுப்பன்றிகள், முள்ளம்  பல வகையான உயிரினங்கள் இருப்பதாக கூறி இருந்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பாக Tempo Traveller வண்டியில் காட்டின் உள்ளே அழைத்துச் செல்கின்றனர். ஒரு மணி நேரப் பயணத்திற்கு ரூ. 150 வசூலிக்கின்றனர். மேலும், முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு காட்சியகமும் அரசு அமைத்துள்ளது.



மேலும், திறந்த வெளி ஜீப்பில் காட்டினுள்ளே சென்று வன உயிரினங்களை பார்க்க முடியும். அதற்க்கான வசதியுடன் பல ஜீப்புகள் காத்திருக்கின்றன. 1.30 நிமிடப் பயணம். அரசு வண்டியில் சென்றால் செல்ல முடியாத சத்தியமங்கலம் வனப்பகுதியையும், மாயோர் என்னும் சிற்றுரையும் அங்கு ஓடும் அழகான நதியையும் காண முடிகின்றது. 10 பேர் அமரக் கூடிய ஜீப்பிற்கு ரூ. 800 கேட்கின்றனர். காட்டுவழிப் பயணம் என்பதால் அதன் சுவாரஸ்யத்தை கண்டு களிக்க இந்த தொகை கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாயோர் நதி யில் ஒரு சிறிய தடுப்பணை  கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தை மிக அருகில் இருந்து கண்டு களிக்க முடிகின்றது. இந்த நதி பவானி ஆற்றுடன் கலப்பதாக கூறினார்கள். 1.30 மணி நேர ஜீப் பயணத்தில் நாங்கள் யானை, மான்கள், மயில்கள் மற்றும் லங்கூர் வகை குரங்குகளை  மட்டுமே பார்க்க முடிந்தது. அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வாசகம் பலித்திருந்தது. அந்த வாசகம், "அதிர்ஷ்டம் உள்ளவர்கள் மட்டுமே மிருகங்களை காண முடியும்", "Animal sight-seeing is the matter of luck".



முதுமலையில் தாவரங்கள், காடு மற்றும் விலங்குகளை கண்டு ரசித்த பிறகு மசினகுடி, தலைகுந்தா  வழியாக  26 கொண்டை ஊசி திருப்பங்கள் உடைய சாலையில் மீண்டும் உதகை வந்தடைந்தோம். ரம்மியமான சாலை அப்போதுதான் போட்டு முடிக்கப்பட்டிருந்தது. உதகையில் சென்னை செல்லும் பேருந்தில் ஏறி 2 நாட்களுக்கான பயணத்தை மீண்டும் நினைத்துக்கொண்டே சென்னை நோக்கிப் பயணமானோம்.  
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena